இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது. பிரிமிங்காம் பகுதியில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணிக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியிருக்கும் முதல் போட்டியே, இங்கிலாந்தின் கோட்டை என அழைக்கப்படும் எட்க்பாஸ்டன் மைதானத்தில் வைத்துதான் தொடங்குகிறது. 1902ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இதுவரை விளையாடியுள்ள 50 போட்டிகளில் 27-ல் வெற்றிபெற்றுள்ளது. மேலும், 17 ட்ராக்களும், 8 தோல்விகளும் அதில் அடக்கம். கடைசியாக 2008ஆம் ஆண்டுதான் இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி தோற்றிருக்கிறது. சமீபத்தில் இங்கு ஏற்படுத்தப்பட்ட சில கட்டட மாறுதல்கள், பந்தை ஸ்விங் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இப்போதும் பருவநிலை மாற்றம், பிட்சில் படர்ந்திருக்கும் புல் என பலவும் வேகப்பந்துக்கு கைக்கொடுக்கும்.
அதேசமயம், இந்திய அணியோ இங்கு விளையாடியுள்ள ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை கூட வெற்றிபெற்றது கிடையாது. ஐந்து தோல்விகள், ஒரு ட்ரா, கடைசியாக ஆகஸ்ட் 2011-ல் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது என பலவும் இந்திய அணிக்கு சாதகமற்ற சூழலாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்திய அணியில் பல மாறுதல் ஏற்பட்டிருக்கின்றன. ஆண்டர்சன் மற்றும் ப்ராடை மட்டுமே நம்பி களமிறங்கும் இங்கிலாந்து அணிக்கு, இந்தியாவின் வேகப்பந்து கூட்டணியான உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமியின் அதிரடி ஆட்டம் காட்டலாம்.