இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 138 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார்.
பேட்டிங், ஃபீல்டிங்க் என அனைத்திலும் சொதப்பிய தென் ஆப்பிரிக்கா அணி 38 ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன் அவுட் ஆனதை கவனிக்க தவறியது. இது அந்த ஆட்டத்தில் போக்கையே மாற்றியது. இந்நிலையில் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் டூப்ளஸிஸ் இந்த தொடர் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அப்போது பேசிய அவர், "இந்தத் தோல்வியின் வேதனையை நாங்கள் மிகக் கடுமையாக உணர்கிறோம். எங்கள் வீரர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தத் தொடர் தோல்விகளால் எனக்கு 5 வயது கூடுதலாகிவிட்டது போல் இருக்கிறது. வயதானவனாக உணர்கிறேன். என் உடல் புண்ணாகிவிட்டதைப் போல் உணர்கிறேன். நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டுச் செல்கிறோம். ஒரு கேப்டனாக என்னால் அணி வீரர்களிடம் குறிப்பிட்ட அளவுதான் கேட்க முடியும். அவர்களும் முடிந்தவரை போராடினார்கள்.
தாஹிர் பந்துவீச்சில் வில்லியம்ஸன் அடித்த ஷாட் பேட்டில் பந்து சென்றதா என்பதை நாங்கள் கவனிக்கவில்லை. அதை விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் பக்கத்தில் இருந்தும் கவனிக்கவில்லை. இதை தவறவிட்டுவிட்டோம் என நினைக்கிறோம்" என தெரிவித்தார்.
6 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து, 4 போட்டிகளில் தோல்வி என 3 புள்ளிகளுடன் உள்ளது. இனிவரும் 3 போட்டிகளில் வென்றால்கூட தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.