ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
தனக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை முடித்துவிட்டு விராட் கோலி இந்தியா திரும்பவுள்ளார். இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் துணைக்கேப்டனான ரஹானே அணியை வழிநடத்த இருக்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னரிடம் ரஹானே கேப்டனாக செயல்பட இருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த வார்னர், "ரஹானே மிகவும் அமைதியானவர். அவரிடம் நல்ல கிரிக்கெட் மூளை உள்ளது. அவர் தலைமையிலான அணிக்கு எதிராக களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. இந்திய அணியில் கேப்டனுக்கான திறமையுடன் மூன்று முதல் நான்கு வீரர்கள் வரை உள்ளனர். ரஹானே அவரது குணவியல்புடன் சாந்தமான முறையில் போட்டியை அணுகுவார்" எனக் கூறினார்.