டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், நேற்று (23.07.2021) கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கியது. இந்தநிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரஷ்யா வெள்ளி பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வெண்கலத்தையும் வென்றுள்ளது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிகளின் க்ரூப் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இதில் இந்தியா 3 - 2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வில்வித்தை கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இளவேனில் வாலறிவன் 16வது இடத்தையும், அபூர்வி சந்தேலா 36வது இடத்தையும் பிடித்தனர். இதனால் இருவருமே இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தனர்.
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், மாணிக்க பத்ரா மற்றும் ஷரத் கமல் ஜோடி, தைவானிடம் (சீன-தைபே) 0 - 4 என்ற கணக்கில் வீழ்ந்தது.