Skip to main content

இந்திய கிரிக்கெட் அணிக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் பரிசு அறிவிப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Announcement of prize for the Indian cricket team on behalf of Maharashtra govt

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று (04.07.2024)  டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாகக் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை  வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கினர். இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. இதனையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொண்ட நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “நான் நேற்று இந்திய அணியை வரவேற்றேன். இன்று ரோஹித் சர்மா இங்கு வந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நேற்று மும்பையில் இருந்த போது நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

 

Next Story

சொகுசு கார் மோதி பெண் பலி; சிக்கிய முக்கிய புள்ளி

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Woman incident in luxury car collision by shiv sena party leader son

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த மே 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதினார். இந்தக் கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், புனே கார் விபத்து சம்பவம் போல் மீண்டும் ஒரு பகீர் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் நேற்று (07-07-24) பிஎம்டபிள்யூ கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இந்த கார், அங்குச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால், இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தியதில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா தான் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, மிஹிர் ஷா தலைமறைவாகி இருக்கிறார். இந்த நிலையில், மிஹிர் ஷாவின் தந்தையும், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் துணைத் தலைவருமான ராஜேஷ் ஷாவையும், ராஜேஷ் ஷாவின் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயர் காவேரி நாக்வா என்பதும், இவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. 

Next Story

IND vs ZIM : ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
IND vs ZIM : India beat Zimbabwe and win

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (07.07.2024) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இந்தியாவுக்காக தனது முதல் டி20 போட்டியில் இன்று களமிறங்கினார். இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இருப்பினும் சதம் அடித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதே சமயம் தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே முதல் சதத்தை அடித்து அபிஷேக் சர்மா ரசிகர்களின் கவனத்தைத் தனது பக்கம் திருப்பியுள்ளார். இதனையடுத்து இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 8 சிக்சர்களுடன் 100 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் விளாசி அசத்தினர். இந்திய அணியின் அதிரடி பேட்டிங் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

IND vs ZIM : India beat Zimbabwe and win

இதனையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியில் வெஸ்லே 43 ரன்களும், லூக் ஜாங்வே 33 ரன்களும், ப்ரையன் பென்னட் 26 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஆவேஷ் கான் 3, முகேஷ் குமார் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்கள் எடுத்தனர். நேற்று (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இன்று வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.