2019 உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது குறித்து இந்திய வீரர் ரஹானே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனான ரஹானே கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். தற்போது 13வது ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் டெல்லி அணி சார்பில் விளையாட பயிற்சி எடுத்து வரும் ரஹானே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் பேசும்போது, "உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும், நான்கவாது இடத்தில் விளையாடுவோம் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. உலக கோப்பைத் தொடர் நடந்து கொண்டிருந்த போது நான் கவுண்டி கிரிக்கெட் விளையாடினேன். ஒவ்வொரு வீரருக்குமே உலக கோப்பை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் குறிப்பாக கடந்த கால செயல்பாடுகள் நன்றாக இருக்கும் போது அதை நாம் நிச்சயம் எதிர்பார்ப்போம். ஒரு நாள் போட்டிக்கான அணியிலிருந்து என்னைக் கழட்டி விடும் போது, என்னுடைய கடந்த கால செயல்பாடுகள் எல்லாம் சிறப்பாகவே இருந்தன. சராசரி, ஸ்ட்ரைக் ரேட் என புள்ளி விவரங்கள் பற்றி பேசுவார்கள். அவை கூட எனக்கு சிறப்பாகவே இருந்தன. என் மீதும் என் திறமை மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாள் போட்டிக்கான அணியில் நிச்சயம் மீண்டும் இடம் பிடிப்பேன்" என்றார்.