ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் மற்ற வெளிநாட்டு வீரர்களை விட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கம் இருக்கும். இது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த வருடம் இவர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலான போட்டிகளின் முடிவுகளை மாற்றியுள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு ரஸ்ஸல் மற்றும் நரைன், மும்பைக்கு பொல்லார்ட் மற்றும் அல்ஜாரி, சென்னைக்கு பிராவோ, பஞ்சாப் அணிக்கு கெயில் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரில் 10+ போட்டிகளின் முடிவுகளை மாற்றியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கெயில் மும்பை பவுலர்களை திணறடித்தார். ராகுல்-கெயில் ஜோடி அசத்தல் தொடக்கம் அளித்தது. ஆனால் மிடில் ஓவர்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க தவறினர். இருப்பினும் இறுதி ஓவர்களில் ராகுல் விளாச 197 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி. ராகுல் ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடித்தார். அரிதாக பும்ராவின் ஓவரே விளாசப்பட்டது.
மும்பை மைதானத்தில் எட்டக்கூடிய ஸ்கோர் என்றாலும், ரோஹித் இல்லாததால் கடினமாகவே தெரிந்தது மும்பை அணிக்கு.மேலும், ஒருபுறம் விக்கெட்கள் சரிய, மறுபுறம் அதிக ரன்களும் எடுக்கப்படவில்லை. இதனால் கடைசி 10 ஓவர்களில் 13+ ரன் ரேட் தேவை என்ற நிலையில் கேப்டன் பொல்லார்ட் களத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்.
எந்த பவுலர்களின் ஓவரில் ரன்கள் குவிக்க வேண்டும், யாருடைய ஓவரில் பொறுமையாக ஆட வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து விளையாடினார் பொல்லார்ட். மறுபுறம் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்கள் வெளியேற மும்பை மைதானமே நம்பிக்கை குறைந்து காணப்பட்டது.
தனி ஒருவனாக களத்தில் போராடி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியளித்தார். பொல்லார்டின் அதிவேக பேட் ஸ்விங்கினால், பேட்டில் பட்ட அனைத்து பந்துகளும் பவுண்டரியும், சிக்ஸருமாக பறந்தன. ஐபிஎல் வரலாற்றில் ஒரு சிறந்த இன்னிங்க்ஸ் ஆடி கேப்டன் பொல்லார்ட் அசத்தினார். 31 பந்துகளில் 83 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வீரர் மில்லர் மும்பை அணியின் 4 முக்கிய வீரர்களின் கேட்ச்கள் பிடித்து அசத்தினார். சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய டி20 போட்டியில் ஃபீல்டிங்கில் 4 கேட்ச்கள் மற்றும் 2 ரன் அவுட் செய்து ஆட்ட நாயகன் விருதை பெற்று கலக்கினார்.
கொல்கத்தா அணி வெற்றிபெற்ற நான்கு போட்டிகளில் 3 போட்டியில் ரஸ்ஸல் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். அதே போல பஞ்சாப் அணிக்கு கெயில் ஒரு முறையும், மும்பை அணிக்கு பொல்லார்ட் மற்றும் அல்ஜாரி தலா ஒரு முறையும் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளனர். பிராவோ டெத் பவுலிங்கில் சிறப்பாக பவுலிங் செய்து சென்னை அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
இந்த வருடம் இதுவரை விளையாடிய 24 ஐபிஎல் போட்டிகளில் 6 ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர்கள் வாங்கியுள்ளனர்.