பிரசவ வலியையே தாங்கும் உடல் வலிமையும் மனவலிமையும் பெற்ற பெண், இன விடுதலையின் அடிப்படை பெண்களின் மன மாற்றமே. பழைய பிற்போக்கான சடங்குகளில் இருந்து அவள் முதலில் வெளி வர வேண்டும். அடுப்படி மட்டுமே அவள் வாழ்க்கை அல்ல. அனைத்து தரப்பு பெண்களுக்கும் பொருளாதார விடுதலையே அடிப்படை பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவள் தன்னை முழுவதும் கல்வி மயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு நிகராக சமூக உற்பத்தி செயல்கள் மற்றும் உடற்பயிற்சி போன்ற விசயங்களில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வதுடன் அறிவியல் பூர்வமான விசயங்களிலும் தனது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வசதி படைத்த, வசதியற்ற, நடுத்தரப் பெண்கள் என அனைவரும் பெண் என்ற ஒரே உணர்வுடன் ஒன்று பட வேண்டும். இங்கு உடல் ரீதியாக பாலியல் மற்றும் மனரீதியாக அனைத்து தரப்பு பெண்களும் பெண் என்பதாலேயே கசக்கி நசுக்கப்படுகின்றனர். சில மனித மிருகங்கள் ''மலரினும் மெல்லிய காதலை, காமத்தை... இரும்பு கம்பிகள் கொண்டு'' ஆராய்ச்சி செய்ய முற்படுகின்றன. பண மற்றும் இன ரீதியான ஜாதி மத வித்தியாசம் ஏதும் இன்றி பெண் எனும் ஒரே புள்ளியில் இந்தியப் பெண்கள் ஒன்றுபட வேண்டும். அன்றைய இந்தியாவில் பெரும் புரட்சி கரமான செயல்களை ஆரம்பித்து சிறப்பாக முடித்து வைத்தவர்கள் வசதி படைத்த மேல் தட்டு பெண்களே. சாதாரண எளிய பெண்களைக் கொண்ட ''சில அமைப்புகள்'' வசதியான பெண்களை ஒதுக்கி வைப்பது ஒட்டு மொத்த பெண் இனத்தின் ஒற்றுமையை குலைக்கும் செயல் ஆகி விடும் . பெண்ணிய அமைப்புகளுக்குள் மனரீதியான புரிந்து கொள்ளும் தன்மை அவசியம் வேண்டும்.
திருமண ஒப்பந்தம் , அதை முறித்துக் கொள்வது, சொத்துகளில் சம உரிமை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் பெண் விடுதலை என்ற விஷயத்தை அடக்கி விடக் கூடாது. அதிகரித்து வரும் இன்றைய உலகளாவிய கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் நம் இந்தியப் பெண்களை குறி வைத்து அவர்களை தேவையற்ற பொருள்களை வாங்க வைத்து பெண்களின் கடுமையான உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை வீணடிக்கும் ஏமாற்று முயற்சிகளில் இருந்தும் அவர்கள் வெளியில் வர வேண்டும். அழகி அழகி என வர்ணித்து புகழ்ந்தே இங்குப் பெண்கள் அடிமைப்படுத்த படுகின்றனர். அடிமைத் தளைகளை அறுத்தெறிந்து வெளியில் வாங்க ஆண்களின் தோழிகளே !