Skip to main content

"மெட்ராஸ் ஐ வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?"- சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

"What should be done to avoid coming to Madras?"- Siddha doctor Arun explained!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் அருண் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மெட்ராஸ் ஐ சமீப காலமாக அதிக பேருக்கு பரவிக் கொண்டிருக்கும் ஒரு நோயாக இருக்கிறது. மெட்ராஸ் ஐ என்றால் என்ன என்று பார்ப்போம். இது வைரஸ் தாக்குதலினால் வரக் கூடிய கண் நோய்களில் ஒன்று என்று நவீன மருத்துவம் சொல்கிறது. நமது சித்த மருத்துவம் எப்படி பார்க்கிறது என்று சொன்னால், கண் நோய்கள் எல்லாமே பித்தத்தின் அறிகுறிகளாகத்தான் பார்க்கிறோம். உடலில் பித்தம் அதிகரித்தால், இந்த மாதிரியான நோய்கள் வருவதற்கு உண்டான வாய்ப்புகள்  இருக்கிறது. 

 

மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்ட நபரைப் பார்த்தாலே நமக்கு அவை தொற்றிக்கொள்ளுமா என்ற சந்தேகம் பலர் மத்தியில் எழுந்துள்ளது. கைகள் மூலமாக தான் கண்களுக்கு நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய இடத்தையும், அவர் கை வைத்து பயன்படுத்திய இடத்தையும், நீங்கள் ஷேர் செய்து பயன்படுத்தினால், அப்போது அவர் கை வைத்த இடத்தில், நீங்கள் கை வைத்து அதை கண்களில் வைப்பதனால் மட்டுமே மெட்ராஸ் ஐ நோய் பரவுகிறது. நேரடியாக பார்ப்பதனால் மெட்ராஸ் ஐ பரவுவதில்லை. 

 

பொதுவாக, உங்கள் கையை நன்றாக கழுவாமல், முகத்துக்கு முன் கொண்டு போவதைத் தவிர்க்க வேண்டும். பல நோய்களுக்கு காரணம், நமது கைகள். எல்லா இடத்திலும் கிருமிகள் இருக்கிறது; நுண்ணுயிர்கள் இருக்கிறது. மேஜையைத் தொடுகிறோம், மாடிப்படியைப் பிடிக்கிறோம், ஸ்விட்ச் ஆன் செய்கிறோம். பல கிருமிகள் அதில் இருந்து நமது கைகளுக்கு ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கலாம். கைகளை நாம் கழுவாமல், நேரடியாக மூக்கிலோ, கண்களிலோ, வாய்களிலோ தொடும் போது, கிருமிகள் நமது உடலுக்குள் செல்கின்றன. உங்கள்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தது என்றால், நோய் வராமல் தடுக்கப்படும். 

 

மெட்ராஸ் ஐ-க்கான அறிகுறிகள் என்னவென்றால், முதலில் கண்கள் சிவந்திருக்கும். சில பேருக்கு கண்களில் எரிச்சல் இருக்கும். கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கலாம். சில பேருக்கு கண்களில் வீக்கம் இருக்கும். மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், சுத்தமான துணியை கையில் வைத்துக் கொண்டு, கண்களில் இருந்து வரும் நீரை துடைக்க வேண்டும். பின்னர், அந்த துணியை சரியான முறையில் டிஸ்போஸ் செய்ய வேண்டும். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கும் மெட்ராஸ் ஐ பரவுவது முற்றிலும் தடுக்கப்படும். 

 

நோய் வந்த பிறகும் கண்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு எதாவது சித்த மருந்துகள் இருக்கிறதா என்று கேட்டால், ஆம் இருக்கிறது. கண் நோய்களுக்கு என்று நிறைய மூலிகைகள், மருந்துகள், சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. சித்த மருத்துவத்தில் கண் நோய்கள் 96 வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.