மாசு நிறைந்த நம் ஊரில் நம்முடைய சருமத்திற்கு என்ன சிக்கல் வருகிறது என்பது குறித்து டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்.
நம்முடைய சருமம் என்பது உடலின் மிக முக்கியமான அரண். தோல் தான் நமக்கான பாதுகாப்பை வழங்குகிறது. தோலில் ஏற்படும் கட்டிகளுக்குக் காரணம் தோல் கிழிவது தான். தோலில் ஏற்படும் சிறிய ஓட்டை கூட நம்முடைய வாழ்க்கையை சில நாட்கள் முடக்கிப் போடும். அந்த அளவுக்கு தோல் என்பது நம்மைப் பாதுகாக்கக் கூடிய ஒரு சக்தி. தோலில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் நமக்குத் தரும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இவற்றில் ஏற்படும் பாதிப்புகள் தான் தோல் வியாதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
தினமும் குளித்து தோலை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம். தூசியில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் சோப்பு போட்டு கழுவினால் தான் முழுமையாக சுத்தப்படுத்த முடியும். இதை நாம் செய்யாமல் விட்டால் வியர்க்குரு ஏற்படும். அதனால் புண்கள் ஏற்படும். தலைக்கு குளித்தால் சளி பிடித்துவிடும் என்று தமிழ்நாட்டில் பலர் நினைக்கின்றனர். அது தவறு. பாத்ரூமில் நீண்ட நேரம் இருப்பது, நீண்ட நேரம் குளிப்பது ஆகியவற்றால் தான் சளி ஏற்படும்.
அதிக குளிர்ச்சியான சமயங்களில் கூட மலையாளிகள் தலைக்குக் குளிக்காமல் இருப்பதில்லை. அதனால் அவர்களுக்கு சளி பிடிப்பதில்லை. இதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய தோல்களைக் கழுவி அழுக்கை சுத்தப்படுத்துவது தான் குளியல். கழுவக் கழுவத் தான் முகமும் அழகாகும். சூட்டால் கட்டிகள் ஏற்படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டைத் தணிக்கலாம்.