கழுத்து வலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று நம் நடைமுறை வாழ்வோடு இணைத்து விளக்குகிறார் முதுகுத் தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மரியானோ புருனோ.
கழுத்து எலும்பின் பக்கவாட்டுத் தசைகள் விரைவில் சோர்வடைகின்றன. இதன் விளைவாகக் கழுத்து வலி ஏற்படுகிறது. அந்த சமயத்தில் கழுத்துக்கு நாம் அதிகம் வேலை கொடுத்தோமா என்பதை கவனிக்க வேண்டும். உடனடியாக குனிந்து வேலை செய்வதைக் குறைக்க வேண்டும். "என்னுடைய வேலையே குனிந்து செய்யும்படி தானே அமைந்திருக்கிறது சார்" என்று நீங்கள் சொல்வது புரிகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரை ஒரு அடி மேலே தூக்கி வைக்கலாம். அதற்கு அடியில் தடிமனான நான்கு புத்தகங்களை வைக்கலாம். இது உங்கள் லேப்டாப்புக்கும் பொருந்தும். இதன் மூலம் நீங்கள் குனிவதற்கான தேவை குறையும்.
உங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியின் உயரத்தையும் இவ்வாறு நீங்கள் கூட்டலாம். புத்தகம் படிக்கும்போது உட்கார்ந்து கொண்டு படிக்காமல், குப்புறப்படுத்துக்கொண்டு படித்தால் உங்கள் தலை நிமிர்ந்து இருக்கும். அலைபேசியில் வீடியோக்கள் பார்ப்பதையும் இந்த முறையில் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய கழுத்துக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். இவற்றைச் செய்வதன் மூலமாகவே பெரும்பாலான கழுத்து வலிகளுக்கு நிவாரணம் கிடைத்துவிடும்.