பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு; சிறுநீர் அடங்காமை சிக்கல் குறித்து நமது நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்கு பிரபல மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் அவர்கள் விளக்கம் அளித்தார். அதை பின்வருமாறு காணலாம்.
இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரஸ் யூரினரி இன்காண்டினெண்டல் என்கிறார்கள். அழுத்தம் காரணமான சிறுநீர் அடங்காமை அறிகுறிகள் வரும் என்பது மன அழுத்தம் மற்றும் டென்சன் காரணமாக வருகிறது என்று அர்த்தமில்லை. அவை வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய விசயங்களான இருமல், தும்மல், சிரிப்பு மற்றும் குனிந்து எடை அதிகமான பொருட்களை தூக்கும் போது அவர்களையே அறியாமல் அவர்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படும்.
மற்ற எல்லா நேரமும் சரியாகத்தான் இருப்பார்கள். அடக்க முடியாத அளவுக்கு சிரிப்பும், இருமலும் வரும் பட்சத்தில் அந்த நேரத்தில் சிறுநீர் கசிவு ஏற்பட்டு விடும். இது அதிகமாக பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விசயம். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கரும்பலகை பயன்படுத்தும் போது சாக்பீஸ் தூசியால் ஏற்படும் அலர்ஜியால் இருமினால் கூட சிறுநீர் கசிய ஆரம்பிக்கும். பொது விழாக்களில் கலந்து கொள்ளும் போது சில சமயம் அளவுக்கதிகமாக சிரித்து விட்டால் கூட சிறுநீர் கசிவு ஏற்பட்டு சங்கடமான அவமானகரமான மனநிலையை உண்டாக்கி விடுகிறது.
வயதானவர்களுக்கு மட்டும் இப்படியான பிரச்சனை வருகிறது என்று சொல்லிவிட முடியாது. இளம் வயது பெண்களுக்கு கூட சில சமயம் இந்த பிரச்சனை வருகிறது. சுகப்பிரசவம் நடைபெற்ற பெண்களுக்கும் ஏற்படுகிறது. உடற்பருமன் பிரச்சனையாலும் சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை பெரும்பாலும் பெண்கள் வெளியே சொல்வதில்லை. டாக்டர்களிடம் கூட மேலோட்டமாகத்தான் சொல்வார்கள். முழுமையாகப் பரிசோதித்தால் தான் இந்த பிரச்சனையின் தீவிரத்தன்மையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணர்த்த முடியும்.