'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நமது உடல் 98.6 வெப்பநிலையில் மெயின்டெய்ன் ஆகிறது. ரூம் வெப்பநிலை 28 வரைக்கும் நமக்கு தனியான ஒரு உணவு எதுவும் தேவையில்லை. நமது உடல் எவ்வளவு வெயில் மற்றும் சூட்டையும் தாங்கிக்கும். ஆனால் குளிர்ச்சியைத் தாங்காது. இதை மட்டும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 98.6 F இருந்தால் தான் நமது உடல் வேலை செய்யும். இதில் இருந்து குறையும் போது, அந்த சூட்டை மெயின்டெயின் செய்வதற்கு நாமும் சப்போர்ட் செய்ய வேண்டும்.
குளிர்பிரதேசத்தில் உள்ள ஆடுகள், மாடுகள், சிங்கம், கரடி ஆகிய விலங்குகளுக்கு ஏன் ரோமங்கள் அதிகமென்றால், குளிர்காலத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆண்டவன் வழங்கியது. மனிதர்களை பொறுத்த வரையில், நாம் சட்டையைப் போட்டுக் கொண்டிருப்பதால் தான் உடலில் முடிகள் வருவதில்லை.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பெண் குழந்தைகள் குளிர்காலம் முடியும் வரை 'Sleeveless' ஆடைகளை அணியக் கூடாது. இந்த ஆடைகளின் முக்கியத்தைக் கூறி குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதற்கு தாய், தந்தை இருவரும் கைகள் முழுவதும் ஆடைகள் இருக்கும் அளவுக்கு அணிந்திருந்து குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். இரவில் குளிர் தொடங்கியவுடன், முழு கை கொண்ட மேற்சட்டையை அணிய வேண்டும். இதன் மூலம் கொசுக்களில் இருந்து குழந்தைகளை காக்கலாம். சளியும் பிடிக்காது.
இந்த மாதிரி குழந்தைகளைப் பாதுகாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆணோ, பெண்ணோ ஜீன்ஸை இந்த நான்கு மாதங்கள் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அடுத்த எட்டு மாதங்கள் போட்டுக் கொள்ள வேண்டாம். ஜீன்ஸ் தமிழ்நாட்டுக்கோ, சென்னைக்கோ உகந்த ஆடை இல்லை. நாம் போகும் இடம் எந்த இடமோ, அதைப் பொறுத்து தான் நமது ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் எங்கெல்லாம் வேர்க்கிறதோ, உறிஞ்சும் மாதிரி ஆடை அணியவில்லை என்றால், ஃபங்கஸ் வர வாய்ப்புள்ளது.
மழை நேரங்களில் நமது உடலுக்கு நன்கு சூடு தரக்கூடிய வெந்நீர், டீ, பால் ஆகியவை வார்ம்-ஆக குடித்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.