ஓசிடி என்ற மன நோய் என்றால் என்ன? அது எப்படியான மனநிலை சிக்கலை உருவாக்கும் என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.
ஓசிடி (Obsessive compulsive disorder - OCD) என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை இல்லை. எண்ண சுழற்சி நோய் என்று சொல்லப்படுகிறது, ஆனாலும் அதுவும் சரியானது அல்ல. ஓசிடியில் வருகிற சிக்கல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருத்தல். வெறும் சந்தேகம் அல்ல, தீவிரமான சந்தேகம். எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டை பூட்டைக் கொண்டு பூட்டுறோம், ஒழுங்கா பூட்டியிருக்கோமா என்று பரிசோதிக்கிறோம் அது சாதாரண சந்தேகம். ஆனால் ஓசிடி சிக்கல் உள்ளவர்களுக்கு பத்து முறைகளுக்கு மேல் பரிசோதித்தாலும் அந்த சந்தேகம் தீர்ந்தபாடு இருக்காது. இது தான் ஓசிடியின் ஒரு வகை மனப்பிரச்சனை சந்தேகம். மனதில் உறுதியாக பதிவாகும் வரை ஒரு விசயத்தை, செயலை சந்தேகப்பட்டு பரிசோதித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஓசிடி பற்றி பலர் வெளியே சொல்வதில்லை. ஏனென்றால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே சந்தேகப்பட வைக்கிற, கேள்விக்கு உள்ளாக்குற நிலைக்கு அது தள்ளப்படும் என்பதால் சொல்வதில்லை. ஓசிடி உள்ளவர்கள் தங்களைத் தாங்களே சந்தேகப்பட்டுக் கொள்கிற நிலையும் உண்டு. தீவிரமாக ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு திடீரென வருகிற பாலியல் எண்ணங்களால் நாம் கெட்டவனாக மாறிவிட்டோமோ என்று தீவிரமாக யோசிக்கும் அளவிற்கு மாறிப்போவார்கள்
கொரோனா காலங்களில் எல்லாருமே சுத்தமாகத்தானே, சரியாகத்தானே, சந்தேகத்துடன் தானே இருந்தார்கள் என்பார்கள். அதற்கும் ஓசிடிக்கும் வித்தியாசமுண்டு, கைகளை கொரோனா தொற்று வராமல் 5 நிமிடம் கழுவினால் அது சாதாரணம் தான். ஆனால் ஓசிடி பாதிப்புக்குள்ளானவர்கள் அரை மணி நேரம் கழுவினாலும் அவர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து கைகளை சுத்தப்படுத்தி விட்டோம் என்று மனம் உறுதியேற்காது. இந்த உளவியல் வகை நோய்க்கு தீர்வு, மனநல மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும்.