தூக்கமின்மையால் வரும் சிக்கல்கள் குறித்து சித்த மருத்துவர் நித்யா விளக்கம் அளிக்கிறார்.
இன்றைக்கு இருக்குற காலகட்டத்தில் பல நோய்களுக்கு காரணமாக இருப்பது தூக்கமின்மை பிரச்சனைதான். இது வயது வித்தியாசமின்றி எல்லா வயதினருக்கும் உள்ளது. இரவில் சில வேலைகளை செய்வதால் தூக்கம் வந்தும் நாம் தூங்காமல் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கிறோம். குறிப்பாக இரவில் அதிகமாக போன் பயன்படுத்திக் கொண்டிருப்பதும், நைட் சிப்ட் வேலை செய்து அதனால் நான் பகலில் தூங்கி சமப்படுத்திக் கொள்கிறேன் என்று நினைப்பது முற்றிலும் தவறானதாகும்.
ஒரு நாளுக்கு எட்டு மணி நேர உறக்கம் என்பது மிக மிக முக்கியமானது. எப்போதாவது இதில் முன்ன பின்ன கூடுதல் குறைதல் இருந்தால் பிரச்சனையில்லை. எப்போதுமே இந்த தூக்க நேரம் குறைந்தால் உடலுக்கு கண்டிப்பாக சிக்கலை உருவாக்கும். சித்த மருத்துவத்தை பொறுத்தவரை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றிற்கு முக்கியத்துவம் தரப்படும்.
பித்தம் அதிகரித்தால் தூக்கமின்மை சிக்கல் உருவாகும். பித்தம் எப்படி அதிகரிக்கிறது என்றால் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படும் மாற்றங்கள் பித்தம் அதிகரிக்க காரணமாகும். சிலர் எவ்வளவு தூங்கினாலுமே நான் அசதியாக இருக்கிறேன், தூங்கியது போலவே இல்லை என்பார்கள். இதற்கெல்லாம் பித்தப் பிரச்சனை காரணமாகிறது. உடலின் உள் உறுப்புக்களான கிட்னி, கல்லீரல், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக அமையும்.
ஒழுங்காக தூங்காதபோது உள் உறுப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். இது நோய் வர வழிவகுக்கும். காலை எழுந்ததும் தலைவலி இருப்பது, முடி கொட்டுவது, காதில் இரைச்சல் இருப்பது போல உணர்வது இதெல்லாம் தூக்கமின்மையால் நோய்கள் பெரிதாய் வரப்போவதற்கான ஆரம்ப அறிகுறிகள். தூக்கமின்மையால் மலச்சிக்கல் உருவாகும்.