ரத்த அழுத்தத்தை வாரமல் தடுக்க அன்றாட வாழ்க்கை முறையை எப்படி கையாளலாம் என்பது பற்றி ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேந்திரன் நம்மிடம் விளக்குகிறார்.
அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய காரியங்களை முன்கூட்டியே பிளான் பண்ணி லிஸ்ட் போட்டு அதுக்கேற்றார் போல் செய்தால் அந்த விஷயத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், ரத்த அழுத்தம் வராமல் பார்த்துக்கலாம். உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம் மிக மிக முக்கியம். இதை செய்யும் போது நமது மூளை புத்துணர்ச்சிக்குள்ளாகிறது. தூக்கம் வரவில்லையென்றால், தூக்க மாத்திரையை தேடாமல் நல்ல புத்தகங்களை படியுங்கள். தூக்க மாத்திரைகளை உட்கொண்டால், அது அடிக்சன் ஆகிவிடும். அதனால், கூடுமான வரையிலும் தூக்க மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. நடைபயிற்சி, மூளை பயிற்சி, யோகா, தியானம், நல்ல புத்தகங்களை படிக்கும் போது தான் மூளைக்கு ஓய்வு கொடுக்கும்.
காலையில் இருந்து மாலை வரை தொடர்ச்சியாக ஒருவர் வேலை செய்துவிட்டு அதிலிருந்து விடுபட நல்ல இசையை கேட்கலாம், நல்ல புத்தகங்களை படிக்கலாம், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். காலையில் இருந்து மாலை வரை வேலை செய்த மூளையினுடைய அந்த பகுதிக்கு இதன் மூலம் ஓய்வு கொடுக்கனும். இதுதான் உண்மையான ஓய்வு. அதைவிட்டு, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தூங்கிட்டு இருந்தால், உடன் சோர்வு நீங்குவது என்பது கஷ்டமா இருக்கும். கடுமையாக வேலை பார்த்துவிட்டு சோர்வாக இருந்து தூங்க நினைக்கும் போது, டிவியில் பிடித்த நிகழ்ச்சியை பார்த்தால் உடனே உங்கள் தூக்கம் எல்லாம் காணாமல் போவதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இதுவரை ஸ்ரெயின் ஆகிகொண்டிருந்த மூளையினுடைய அந்த பகுதி ஸ்விட்ச் ஃஆப் பண்ணியிருக்கிறோம். அதற்கு பதிலாக, இன்னொரு பகுதியை ஸ்விட்ச் ஆன் பண்ணி வச்சிருக்கிறோம். இப்படி செய்யும் போது உடலும், மனசும் மனநிறைவாக இருக்கும். இப்படி, உடலுக்கும் உள்ளத்துக்கும் பயிற்சிகள் கொடுக்கும் போது கண்டிப்பாக அந்த மன அழுத்தத்தை குறைக்கலாம்.
அடுத்ததாக உணவு வகைகள் என்பது மிக மிக முக்கியமானவை. அதிகளவு ரத்த அழுத்த நோயாளிகள், அவர்களுடைய மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம். எண்ணெய் வகைகள், கொழுப்பு சத்து பொருட்கள், அதிகளவு உப்பு ஆகிய உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் உப்பு வகையான உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோமோ அப்போதெல்லாம் தண்ணீர் அதிகமாக குடிப்போம். அந்த உப்பும், தண்ணீரும் சேரும் போது ரத்த அளவு அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகமாகுவதற்கான வாய்ப்புதான் அதிகம். எனவே, இது போன்ற உணவு பொருட்களை குறைத்து சாப்பிட வேண்டும். நொறுக்கு தீனி உணவை கொஞ்ச கொஞ்சமாக குறைத்துவிட்டு ஒரேடியாக நிறுத்த வேண்டும்.
அசைவ உணவுகளை சாப்பிடலாம். ஆனால், அந்த உணவுகளில் கொழுப்பு சத்து உள்ள பகுதிகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. எண்ணெய்யில் போட்டு பொறித்த மீன் வறுவல், சிக்கன் பிரை, கருவாடு உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். சுலபமாக ஜீரணம் ஆகும் உணவுகளை சாப்பிடலாம். நடு ராத்திரியில் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இன்றைக்கு 25, 30 வயது இளைஞர்களுக்கு கூட ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு அவர்களுடைய வேலையினுடைய சூழ்நிலைதான் காரணம். எனவே ஆகாரம், போதுமான அளவு தூக்கம், உடற்பயிற்சி, டென்சன் இல்லாத வாழ்க்கை இதையெல்லாம் செய்தாலே, அதிகளவு ரத்த அழுத்தத்தை மிதமான அளவில் குறைக்கலாம். மிதமான ரத்த அழுத்த அளவை இல்லாமல் கூட செய்யலாம்.