உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2500-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கரோனா தொற்று கேரளாவில் அதிகம் காணப்படும் நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு ஆகும் செலவினை அம்மாநில சுகாதாராத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். அதன்படி, கரோனா நோயை உறுதிப்படுத்த 4500 ரூபாய், கிட்டின்(Kit) விலை 3000 ரூபாய், நோய் உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் விலை 1000 ரூபாய் என செலவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் வென்டிலேட்டர் உதவியுடன் ஐ.சி.யூ. வார்டுக்கு நோய் பாதிக்கப்பட்டவர் மாற்றப்பட்டால் நாள் ஒன்றுக்கு 20000 முதல் 25000 வரை செலவு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.