மூன்று வேளை தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரிந்த நமக்கு, உணவை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்; எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்.
உணவே மருந்து என்பது முற்றிலும் உண்மையான கூற்று. சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம் அதுதான். திருவள்ளுவர் கூட மருந்து குறித்துப் பேசும்போது பெரும்பாலும் உணவு பற்றியே பேசியிருக்கிறார். பசித்த பிறகு சாப்பிட வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. நம்முடைய உணவுமுறை என்பது நீருடன் இணைந்தது. இட்லி, தோசை சாப்பிட்டாலும் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என்று நீர்ப்பொருட்களை எடுத்துக்கொள்கிறோம். ஒவ்வொரு நாட்டுடைய தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அந்த நாட்டில் உணவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நம்முடைய தட்பவெப்ப நிலைக்கு மாறுபட்ட உணவுகளை எப்போதாவது எடுத்துக்கொள்ளும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. அடிக்கடி சாப்பிடுவது தவறு. பாரம்பரிய உணவுகளை நாம் எடுத்துக்கொள்வது இப்போது குறைந்துகொண்டே வருகிறது.
நாம் பொதுவாகவே அளவாகச் சாப்பிட வேண்டும். பசித்தவுடன், கால நிலைக்கு ஏற்ற, உடல் உழைப்புக்கு ஏற்ற அளவில் உணவு உண்ண வேண்டும். மூன்று வேளை உணவாக இருந்தது தற்போது நொறுக்குத் தீனிகளால் ஐந்து வேலை உணவாக மாறி வருகிறது. ஆரோக்கியத்திற்காக சாப்பிடுகிறோமா அல்லது சுவைக்காக சாப்பிடுகிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுபவர்கள் கிழங்கு, மாமிச உணவுகளை தினமும் எடுத்துக்கொண்டால் தவறில்லை. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களும் அதைப் போலவே எடுத்துக்கொள்வது தவறு. காலை நேரத்தில் பயிறு வகைகளைச் சாப்பிடலாம். அதன் மூலம் தேவையான புரதச்சத்து நமக்குக் கிடைக்கும். நீரிழிவு நோயாளிகள் சுண்டல் சாப்பிடுவது நல்லது.
மதிய நேரத்தில் அறுசுவை உணவை எடுத்துக்கொள்ளலாம். மோர் ஊற்றியும் சாப்பிட வேண்டும். இரவு உணவு என்பது எளிய உணவாக இருக்க வேண்டும். இரவு 7 மணிக்குள் உணவை எடுத்துக்கொண்டால் செரிமானத்துக்கு நல்லது. குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலுக்கு பிரச்சனைகள் வராது. இரவு நேரங்களில் கீரை போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளையும் இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது. சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது வெயில் காலத்தில் நன்மை பயக்கும். பழைய உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் சேர்த்து வைத்து, சுட வைத்து சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.