எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது. 'ஓம்' இதழுக்காக பாலகுமாரன் எழுதிய 'கடவுளைத் தேடி' தொடரின் ஒரு பகுதி...
வேறு வேலை, வேறு இடம், தனி ரூம். பித்துக்குளி நண்பர்கள் இருந்தார்கள். காசு வைத்துவிட்டு பின்பக்கம் போய் திரும்பினால் காணாமல் போய்விடும். பூட்டு போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஐம்பது வயது ஆள், பூட்டப் படாத என் பெட்டியைத் திறந்து ஏழு ரூபாய் எடுத்ததை கண்ணால் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு சொந்த வீடு இருந்தது. சொத்தும் இருந்தது. ஆனாலும் அடுத்தவர் காசைத் திருடும் புத்தியும் இருந்தது. 'அவன் காசுதானே திருடினான். நீ திருடியது என்ன?' என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். உடம்பு நடுங்கியது.
நாடி சுத்தி, தியானம் என்ற விஷயங்கள் கரையேற்றும் என்று நம்பி அதில் ஈடுபட்டேன். நாடி சுத்தி செய்ய முடிந்தது. காமமும் இருந்தது. காமம் அமைதியாகவும் நின்றது. ஆரவாரமும் செய்தது. மிகப்பெரிய போராட்டமான காலம் அது. என்னென்னவோ சொல்லித் தரப்பட்டது. "ஈரக்கோமணம் கட்டிக்கோ' என்று சொன்னார்கள். "குளிச்சிட்டு படு நல்லாயிருக்கும்' என்றார்கள். "அடிக்கடி மொட்டை அடிச்சுக்கோ. நல்லா தலைக்குக் குளி. மூளை சூடு குறைஞ்சா உடம்பு சூடு குறையும். மொட்டை அடிச்சுண்டா அந்த நிலையே அந்த முகமே உன்னை பெண்கள் பக்கம் போகவைக்காது. க்ராப்பும், தடிமனான உடம்பும், கொழுத்த கன்னமும்தானே ஆடவைக்கிறது. சோற்றைக் குறை. கேன்டீன்ல எடுத்தவுடனே மோர் சாதத்திற்கு போய்டு. எதற்கு பருப்புக் குழம்பு. அத்தனையும் சத்து. சத்துதான் எதிரி. உயிர்வாழ சாப்பிடு போதும்.'
டிராக்டர் கம்பெனி கேன்டீனில் வெறும் மோர் சாதமும், தொட்டுக்கொள்ள காயுமாய் உணவை முடித்தவன் நான் ஒருவனே. இரவு வெறும் வாழைப்பழம் மட்டுமே உணவு என்று வைத்திருந்தேன். ஆனாலும் இவையெல்லாம் சாதாரண உணவுகளைவிட மிகப்பெரிய சத்துக்கள் கொண்டவை என்பது பின்னால் தெரியவந்தது. காலையில் பொங்கல், மத்தியானம் தயிர்சாதம், இரவு வாழைப்பழம். ஈரக்கோமணம். எருமை மாடு மாதிரி உடம்பு இருந்தது. தடைகளை வெட்டி வெட்டி முன்னேறிய காலம் இது. "சண்டை போடாமல், காமம்- அது என்ன? விசாரித்து அறி' என்பது என்னுள் விதைக்கப்பட்டது.
"செயலில் ஈடுபடும்போதே அதைப் பற்றி விசாரி. உன்னுள் என்ன இருக்கிறது. அது பிஸ்கெட்டா? அரைமணி நேரம் கிடைத்தால் சாப்பிடலாம். அரை மணி ஆகிவிட்டதா. இன்னொரு அரைமணி தள்ளிப்போடு. சர்க்கரைப் பாகில் தோய்த்த பாதுஷாவா. நாளைக்கு சாப்பிடு. தள்ளிப்போடு. ஒத்தி வை. காமத்தை, துக்கத்தை, கோபத்தை, பசியை, எல்லாவற்றையும் விலக்கி நிறுத்து. நிதானமாக அனுபவி. கோபத்தை நிதானமாக வெளிப்படுத்து. ருசியை நிதானமாக அனுபவி. துக்கத்தை தள்ளி வை.' இருபத்தியோரு வயது. ஐநூற்று அறுபது ரூபாய் சம்பளம். பத்து கிலோமீட்டர் சைக்கிள் பயணம். அவ்வப்போது கடற்கரை அலையில் இடையறாத மந்திரஜபம், நாடி சுத்தி, பிராணயாமம், தியானம், மகரிஷி மகேஷ் யோகி சங்கத்தில் கற்றுக்கொண்டது என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளுக் குள் நிரம்பிக்கிடந்தன. ""பி.காம் பஸ்ட் க்ளாஸ் முடிச்சுட்டேன். எம்.காம் சேந்திருக்கேன்.'' ""எம்.பி.பி.எஸ் முடிச்சுட்
டேன். எம்.எஸ். பண்றேன்.''
""பி.இ முடிச்சுட்டேன். பிலாயில ஒர்க் பண்றேன். ஹிந்தியில கவிதை கூட எழுதறேன். ஹிந்தி ரொம்ப ஈஸியா. எதுக்கு கத்துக்க மாட்டேன்றீங்க? அவன் பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர். இண்டியன் ஏர்லைன்ஸ்ல ட்ராபிக் மேனேஜர்.''
"அப்படின்னா?''
"பெட்ரோல் எடை இவ்வளவு, அப்போது பயணிகள் எடை எத்தனை, அப்போது பயணிகள் எடுத்துப் போகின்ற உடமைகள் எத்தனை, மீதி ஏற்றப்படுகின்ற பார்சல்கள் எத்தனை என்று கணக்கிட்டு விமானத்தில் ஏற்றவேண்டும். இதுவரை மற்றவைகளை தவிர்க்கமுடியாது. ஏற்றுகின்ற பார்சல்களை எடை போட்டு கூடுதலாகவோ குறைவாகவோ சேர்க்கவேண்டும். நான் சொன்னால்தான் விமானம் புறப்படும். என் கையெழுத்து இருந்தால்தான் பைலட் விமானத்தை சுழலவைப்பார்.''
""என்ன சம்பளம்?''
""இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய். மாதத்திற்கு இரண்டு முறை விமானப் பயணம் இலவசம். அதைத் தவிர ஆன் டூட்டியாக சிலசமயம் இங்கும் அங்கும் போகவேண்டியிருக்கிறது. பார்ப்பதற்கு பைலட் உடைபோல இருக்கும். ஆனால் நான் பைலட் அல்ல. ட்ராபிக் மேனேஜர்.''
பி.ஏ. படித்தவன் ஆகிருதியாய், அழகாய் எதிரே நின்றபோது இன்னும் நான் ஜெயிக்கவில்லையோ என்ற ஏக்கம் வந்தது. ஆனால் அவனுக்கும் தமிழ்க்கவிதையில் ஈடுபாடு இருந்தது.
"பாலா, உன் கவிதை சூப்பர்டா."
"எந்தக் கவிதை?"
"கவிழ்ந்த இருட்டில் மறைந்து கிடந்த உயரத் தென்னை நெற்றொன்று,
வீசிய காற்றில் பிடிப்பைத் தளர்த்தி மண்ணில் விழுந்தது சொத் தென்று,
இருளில் கையை உயர்த்தித் தடவி நெற்றைத் தேடிய ஐயங்கார்,
திரும்பக் காயுடன் என்னை குனிந்து கேட்டார், தூங்கலையா?
பதிலாய் மெல்லிய சிரிப்பைக் கொடுப்பினும் மனசோ சொல்லும் வெகு உரக்க
நெற்றுத் தென்னை கழன்றதற்கே தூக்கம் போச்சே உங்களுக்கு
நெஞ்சே கழன்று வீழ்ந்து கிடக்க தூக்கம் எங்கே சொல்லுங்கோ'
சாவடிச்சடா படவா. லவ் பண்றயா?"
"இல்லடா. லவ் பண்றமாதிரி நினைச்சுக்கறேன்.''
"வேணாம். லவ் பண்ணாத. கவுத்துர்றாளுங்க. பேசாத அப்பா- அம்மா சொல்ற பொண்ண கல்யாணம் செய்துக்கோ. எனக்கு பாத்துண்டு இருக்கா. நான் மூணு பேர செலக்ட் பண்ணி வைச்சிருக்கேன். எந்த இடத்தில வசதியா இருக்கோ, எந்த இடத்தில சௌகரியமா நம்மள நடத்துவாளோ அந்த இடத்தில பொண்ணு பாத்துக் கொடுன்னு சொல்லியிருக்கேன்."
இரண்டாயிரத்து அறுநூறு சம்பளக்காரன் சொல்லலாம். நான் சொல்ல முடியுமா? உடன் சகோதரியே பிறக்காது, இன்னும் இரண்டு தம்பிகள் இருப்பவன் சொல்லலாம். நான் சொல்ல இயலுமா? டிராக்டர் கம்பெனியிலும் வேலைப்பளு அதிகம். பயண நேரமும் அதிகம். பஸ்ஸில் ஏறி பயணப்பட்டால் சிலசமயம் ஒன்றரை மணி நேரம்கூட ஆகும். சைக்கிளில் முக்கால் மணி நேரத்தில் போய்விடலாம். ஆனால் முதுகு வலிக்கும். அயர்ச்சியாக இருக்கும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவு என்பது தவிர, கொஞ்சம் கூடுதலான சம்பளம் என்பது தவிர, சிம்சன் கம்பெனியின் குமாஸ்தா என்கிற
அலட்டல் தவிர வேறொன்றும் அங்கு சுவையாக இல்லை. இதற்கு அந்த கம்பெனி காரணம் இல்லை. என்னுடைய புத்தி. உட்கார்ந்து ஒரு இடத்தில் வேலை செய்கின்ற புத்தியைக் கொண்டிருக்கவில்லை. நிழலாய் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து, காலையில் மோரும் பிற்பகல் ஜுசும் இரண்டு வேளை டீயும் குடித்து, சொன்னதைச் செய்கின்ற வேலை. எந்த புத்திக்கூர்மையும் தேவைப்படவில்லை. எழுந்திரு, உட்கார், இதைச் செய், அதைச் செய், இங்கு வா, அங்கு போ என்ற கட்டளைகளை நான் நிறைவேற்றிக்கொண்டிருந்தேன்.
இது ஒரு மக்குத்தனமான வாழ்க்கை. புத்தி அந்த அலுவலகத்தில் ஈடுபடவேயில்லை. அலுவலகத்தில் ஈடுபடாது எழுதியோ, பாடியோ, ஆடியோ சம்பாதிக்கின்ற ஒரு விஷயத்தை என் வீடு ஆதரிக்கவில்லை. "மூன்றுவேளை மோர் சாதத்திற்கு கவலையில்லாத இருக்கணும். வேலை செய்தா டிராக்டர் கம்பெனி வேலை செய்யணும். சொல்லிப்பாரு. அதை விட்டுட்டு நான் கதை எழுதிண்டு இருக்கேன். கவிதை எழுதிண்டு இருக்கேன்னு சொல்றது மரியாதையாவா இருக்கு? எப்ப பாட்டு கத்துண்டு, எப்ப நீ கச்சேரி பண்ணி...'
எனக்கு மைக் பிடித்து சினிமா பாட்டு பாடும் ஆசை இருந்தது. ஆனால் அதில் காசு வராது. கொஞ்ச ரூபாய் காசுக்காக வாழ்க்கையை அலுவலகத்தில் அடமானம் வைத்த பல பேர்களில் நானும் ஒருவன். ஆனால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஒருமனதாக டிராக்டர் கம்பெனியில் வேலைசெய்ய முடியவில்லை. நன்றாக வேலை செய்கின்ற திறன் மட்டும் ஒரு கம்பெனியில் மரியாதையைக் கொடுத்து விடாது. இணக்கமாக, அனுசரணையாக, நேரம் தெரிந்து பேசவேண்டும். இதை சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ஜால்ரா அடிக்க வேண்டும்.
""என்ன சார் இருமறேள். நல்லாயில்லயே.''
சட்டென்று மேனேஜர் நெற்றியில் கைவைத்து, ""சுடறது சார். ஜுரம் இருக்கு.''
""தெரியலையேடா.''
""எனக்குத் தெரியறது. உள்ளுக்குள்ள இருக்கு. காத்தால என்ன சாப்டேள். ஒரு அனாசின்
போட்டுக்கோங்கோ.''
இந்த மாதிரி விஷயங்களெல்லாம் கைப்பையில் தயாராக இருக்க வேண்டும்.
இப்படி பலநூறு வித்தைகள் இருக்கின்றன. இது தெரியாதுபோனால் வாழ்க்கையில் எங்கிருந்தாலும் ஜெயிக்கமுடியாது. இது சரியா, தவறா? அதுவல்ல பிரச்சினை. இதை உன்னால் முழுமனதாகச் செய்யமுடியுமா முடியாதா. அதுதான் பிரச்சினை. முழுமனதாகச் செய்தால் உன் மனோநிலை எப்படி இருக்கும். செய்யாது போனால் எப்படி இருக்கும்.
""என்னடா இது. அவன் வறான் போறான். குட் மார்னிங்கறான். ஒரு ஓரமா நிக்கிறான். ஜோக் அடிச்சாலும் சிரிக்க மாட்டேங்கறான்.''
""அவன் பெரிய இன்டலெக்சுவல் சார். கதை எழுதறானோன்னோ. ஆனந்தவிகடனிலும், குமுதத்திலும் வருதோன்னோ. அதனால ஒரு கித்தாப்பாதான் இருக்கான்.''
""கதை எழுதறானா? இங்க ஆஃபிஸில் வேலை செய்துண்டு என்ன கதை எழுதறது.''
""சொல்லிப் பாத்துட்டேன். இங்க ஆஃபிஸ்ல வேலை செய்யறதுல அவ்வளவு இஷ்டமில்ல. உங்களுக்கு அவனைப் பிடிக்கலைன்னா வேற டிபார்ட்மென்டுக்கு மாத்திடுங்கோ. நம்ம டிபார்மென்டுல வேலை செய்ய காத்துண்டு இருக்கா.''
குழி பறிப்பவர்கள் என்று இவர்களுக்குப் பெயர். நேரிடையாக கோபப்பட்டு எகிறுகிறவர்களைவிட மிக மோசமானவர்கள்.
""உன்னபத்தி அவ்வளவு நல்ல அபிப்ராயம் அவருக்கு இல்லப்பா. வேற யாரும் உனக்கு சொல்லமாட்டா. நான் சொல்றேன். நான் எத்தனையோ தடவை சப்போர்ட் பண்ணிப் பாத்துட்டேன். அவர் முரட்டுப்பிடிவாதமா இருக்கார்.'' நம்மிடம் வேறுவிதமாகப் பேசுவார்கள்.
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். மதி வேண்டும். நின் கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்.'
எது நோய்? அடுத்தவரை வஞ்சிப்பதும், இடையறாது அதற்கு யோசிப்பதும்தான் மிகப்பெரிய நோய்.
இவர்களிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நான் சென்னையில் கந்தசாமி கோவில் என்று புகழப்படும் கந்தக்கோட்டத்திற்கு செவ்வாய்க்கிழமையில் போனேன். எதிரிகளை நான் பொறுத்துக்கொள்வேன். துரோகிகளைத்தான் என்னால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஆபாசத்தைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முருகர் உபாசனையில் ஒரு உக்ரம் உண்டு. "தனத்தன தனத்தன, திமித்தமி திமித்தமி, டகுக் குடுக்டுடுடொன் தனபேரி' என்று மந்திர உச்சாடனங்கள் கலந்த பாடல்கள் உண்டு. இதற்குப் பலன் இருந்தது. முருகர் காரணமா? என் மன ஒருமையா? அல்லது வேறு ஏதேனுமா? துரோகிகள் அடிபட்டார்கள். அவர்கள் துரோகத்திலேயே அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.
கந்தக்கோட்டம் கோவிலின் உள்ளே நான்கு பக்கமும் கட்டடங்கள் இருக்க, அதன் குளத்துப் படியில் அமர்ந்து வெறுமே தண்ணீரை வேடிக்கை பார்க்கும்போது, அலுவலகத்தில் செய்யவேண்டியதும் செய்யக் கூடாததும் எனக்குப் புரிந்தன. பதட்டமாக ஈடுபடாத கடவுள் வழிபாடும் என்னை அமைதியாக்கிற்று. அந்த அமைதி அலுவலகத்தில் அதிகம் உதவிபுரிந்தது.
விதம்விதமாக சம்பாதிக்கலாம். அதன் விளைவென்ன? முதலில் ஏற்படுவது பயம். யார் எப்போது காட்டிக்கொடுக்கப் போகிறார்கள்- எவரால் என்னவிதமான தொந்தரவு வரும் என்கிற பயம்.எனவே, எந்தவித குறுக்குவழியும் இல்லாத நேரான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழ்வில் பயமில்லாது இருக்கலாம். வாழ்வில் பயமில்லாதபோதுதான் எழுத்துப் பணி சிறப்பாக இருக்கும். நீ சம்பாதிக்கிற ஆளா? அல்லது எழுத்தாளனா? எப்படியாவது ஏதாவது சம்பாதிக்க ஆசைப்படுகிறாயா? அல்லது இருப்பது போதும் என்கிற மனப்பான்மையா? நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். நான் எழுத்தாளன் என்று தெள்ளத் தெளிவாக முடிவுசெய்துகொண்டேன். மூன்றுவேளை மோர் சாதத்திற்கு சம்பாதி என்று சொன்னார்களே. இந்த டிராக்டர் கம்பெனி மூன்று வேளை மோர் சாதத்திற்கு. என் வளர்ச்சிக்கு, என் அடையாளத்திற்கு, என் சிறப்பிற்கு நான் எழுத்தாளனாக மாறுவதே மிக முக்கியம் என்ற தெளிவு வந்துவிட்டது.
லட்சியத்தில் அடையும் வெற்றிதான் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலாக இருக்கமுடியும். நான் எழுதுவதை விடவேயில்லை. எழுதுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் எதையும் அனுமதிக்கவே இல்லை. கடும் உழைப்பு என்பதற்கு நான் உதாரணமாகத் திகழ்ந்தேன். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரமே தூங்கினேன். மற்ற நேரங்களில் படித்தேன். எழுதினேன். இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றேன். எப்பொழுதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நான் ஒட்டுமொத்தமாக வாழ்வு என்பது பற்றியும், மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்வு பற்றியும், யார் இதை நிகழ்த்துகிறார்கள் என்கிற கேள்வியோடும் அலைந்தேன்...