Skip to main content

மாடிவீட்டு மகாலட்சுமி யார்?

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

சச்சிதானந்த பெருமாள்
 

ஆதிசேஷனின் அம்சமான- வைணவம் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பொற்பாதம் பணிந்து வரைகிறேன். ஸ்ரீராமானுஜரின் ஜோதிட நூல் "பாவார்த்த ரத்னாகரம்' 383 சுலோகங்களினால் அருளப்பட்டது. இதன் சிலவரிகளில் வகுக்கப்பட்ட ராஜயோகநிலை தரும் கிரக அமைப்புகளை வாசகர்களுடன் சிறிது பகிர்ந்து கொள்கிறேன்.
 

ramanujar

தந்தையால் வரும் அதிர்ஷ்டம் எப்படி? ஜாதகத்தில் சூரியன் 9, 12-ஆம் வீட்டுக்குரிய கிரகங்களுடன் கூடிநின்றாலும், குருவும் 12-ஆமதிபதியும் இணைந்து 12-ஆம் வீட்டிலேயே இருந்தாலும், உங்களின் தந்தை யோகவான். அவர் சேர்த்துவைத்த பணம், சொத்து ஆகியவற்றை அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிலி நீங்களே. அயன சயன போஜன யோகம் உண்டு உங்களுக்கு. லக்னத்திற்கு 12-ல் வளர்சந்திரன் இருந்தால் தாயாரின் அனுகூலமும், லக்ன 12-ல் சுப சுக்கிரன் நின்றவருக்கு மனைவிவழி அதிர்ஷ்டம், காசு பணமும் சேரும். உங்களின் செவ்வாய் 12-ல் ஆட்சி, உச்சமானால் உடன் பிறப்புகளால் ஆனந்தம், அதிர்ஷ்டம் உண்டுதான்.
 

ramanujar

சுய சம்பாத்தியம் மற்றும் நல்ல துணைவர், நண்பர்கள்மூலம் அதிர்ஷ்டம் அடைய வேண்டுமானால் உங்களின் 7, 9-ஆம் அதிப திகள் பரிவர்த்தனை யோகத்தில் இருக்க வேண்டும். அதாவது பாக்கியாதிபதி (9) 7-ஆம் வீட்டிலும், களஸ்திர ஸ்தானாதிபதி 9-ஆம் வீட்டிலுமாக யோகம்தரும் விருத்திநிலை இது. 7, 9-ஆம் அதிபதி பரிவர்த்தனையால் நல்ல கல்வி, வேலை, துணைவர், பதவி, தூரதேசப்பயணம், தெய்வ கடாட்சம் ஆகிய அதிர்ஷ்டநிலைகளை, 7-ஆம் அதிபதியின் தசா காலங்களில் அனுபவிப்பீர்கள். குறிப்பாக விருச்சிகம் மற்றும் மகர லக்னப் பெண்களின் சுக்கிரன், சந்திரன் பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன், சூரியன் பரிவர்த்தனையானது மாடிவீட்டு மகாலட்சுமியாக புகழுடன் வாழவைக்கும்.
 

ramanujar temple

6-ஆம் வீட்டில் அமர்ந்த புதன் ஆட்சியானால், தன் தாயாருடன் பிறந்தோர் (தாய் மாமன்வழி) மூலமாக அதிர்ஷ்டம், பணம் சம்பாதிக்க முடியும். ஒருபடி மேலாக 2-க்குரிய கிரகமும் புதனும் கூடி 6-ல் அமர்ந்த யோகவான்களுக்கு மாமன் பிள்ளைகள் உங்களின் முன்னேற்றத்திற்குக் கைகொடுப்பார்கள். இதையே வள்ளுவர்கள் "ஆறும் புதனும் பலம்' என குறிக்கிறார்கள். உங்கள் கட்டங்களில் 4-க்கு 3-ஆமிடமான 6-ஆம் வீட்டைக் கொண்டு தாயாரின் உடன்பிறந்தவர் கதி நிர்ணயிக்கப்படுவது ஜோதிட அரிச்சுவடி. 6-ல் புதன் நன்னிலை பெற்றவரை எதிரிகள் வீழ்த்த இயலாது.

கோபம் மிகுந்தவரானபோதும் குணவதி களான விருச்சிகம் மற்றும் சிம்ம லக்னத் தாய்மார்களுக்கு, 5-க்குரியவரான குரு உச்சம் பெற்றால் உங்களின் பிள்ளைகள் பேர் சொல்லும் (ஊர் மெச்சும்) வாரிசுகளே.

குழந்தை பிறந்த நேரம் உங்களை கோபுர உச்சிக்கே புகழ், கௌரவத்துடன் உயர்த்தும். கிராமத்து அக்ரஹாரத்து ஓட்டு வீட்டை விட்டு, நாகரிகநகரில் பல அடுக்கு மாளிகை வீட்டில் பிள்ளைகளால் மகிழ்வாழ்வு அனுபவிப்பவர் ஏராளம்.

ராஜயோகம் என்பது செல்வாக்கும், சொல்வாக்கும், அதிகாரப் பதவி அந்தஸ்தாலும் அமைவது. உங்களின் தனாதிபதி- 2-ஆம் வீட்டிற்குரியவர் 2-ஆம் வீட்டிலேயும், பஞ்சமாதிபதி- பூர்வபுண்ணியாதிபதி 5-ஆம் வீட்டிலேயும் நின்றாலும், 10-ஆம் வீட்டில் 5-க்குரிய கிரகம் ஆட்சி, உச்சமானாலும் பணம், பதவி, செல்வாக்கிற்கு பஞ்சமில்லா அதிர்ஷ்டசாலிகளே நீங்கள். குறிப்பாக இந்த 2, 5, 10-ஆம் வீடுகளில் ஒருவரின் செவ்வாய், சந்திரன், சூரியன் ஆட்சி, உச்ச மானவர்கள் அரசியலில் புகழ், அதிகாரப் பதவி, வருமானத்திற்கு மிகையாக சொத்து சேர்க்கமுடிகிறது. விதிவிலக்காக 5-ல் பலமான குருவுடன் கேதுவும் கூடி நின்று, கேது தசாபுக்தி நடக்கையில் புகழ், கௌரவத்திற்குக் களங்கம், அவமானமும் தருவது வெற்றி ஜோதிடர் அனுபவம்.

முடிவுரையாக, கேரள ஜோதிடப்படி உங்களின் குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன், சனி இவர்கள் பஞ்சம பாக்கியஸ் தானமான 5-ஆம் வீடு, 9-ஆம் வீடுகளில் உச்ச கிரக வலுப்பெற்றவர்கள் மிக யோக வான்களே. எதிலும் வெற்றி! வாழ்வில் இன்பமே எந்நாளும். சிரமமே இல்லாமல் சொகுசு வாழ்வு அனுபவிப்பவர்கள் நீங்களாகவே இருப்பீர்கள். வாழிய நலம்.

Next Story

ராஜஸ்தானில் துர்க்கை; சுஸ்வாணி மாதாஜி மந்திர் !

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Suswani Mataji Temple

சுஸ்வாணி மாதாஜி மந்திர் என்னும் ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தில், பிக்கானிர் மாவட்டத்திலுள்ள மோர்கானா என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமிது. இந்துக்கள் மட்டுமின்றி, சமணர்களும் இந்த ஆலயத்தை மிகவும் பக்திப் பெருக்குடன் வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அன்னை சுஸ்வாணி, துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதற்கு அருகில் சிங்கத்தின்மீது அன்னை வீற்றிருக்கிறாள்.

1573-ஆம் வருடத்தில் ஹேம் ராஜ் என்ற மன்னர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார். அதனால் அவரது வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அன்னையை குலதெய்வமாகவே வழிபடுகின்றனர். இதுதவிர, டுகார், சங்க்லா ஆகிய சமணப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த தேவியைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஜெய்ஸால்மரிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வெளிச்சுவரிலுள்ள சிற்பங்களும் அந்தக் கற்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

பிரதான வாயில் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பூமிக்குக் கீழேயும் அறைகள் இருக்கின்றன. ஆலயத்தின் மேற்கூரை 16 தூண்களின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. சில தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்திற்குள் ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. இங்கிருக்கும் சிவலிங்கம் 5,000 வருடங்கள் பழமையானது. சிவனது ஆலயமும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

Suswani Mataji Temple

சேட் சக்திதாஸ் - சுகன் கன்வார் என்னும் தம்பதிக்கு 1219-ஆம் வருடத்தில் மகளாகப் பிறந்தவள் சுஸ்வாணி. பத்து வயதுகொண்ட அவளுக்கும், துகார் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நடைபெறுவதற்குமுன்பு அவளைப் பார்த்த நாகூர் நவாஸ் என்ற மன்னன் அவளது அழகில் மயங்கி, தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சிறுமியின் தந்தையிடம் கூறினான்.

"அவள் துர்க்கையின் அவதாரம். அவளது சரீரத்தை வேறொரு சரீரம் தொடக்கூடாது. இந்து மதத்தைச் சேர்ந்த அவளை முஸ்லிமான நீ அடைய நினைக்கலாமா? அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்'' என்று கோபத்துடன் கூறினார் சிறுமியின் தந்தை. அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தான் மன்னன்.

தன் தந்தைக்கு நேர்ந்த கதியை நினைத்தவாறு கவலையுடன் படுத்திருந்த சுஸ்வாணி, தன் துயரத்தைக் கடவுளிடம் முறையிட்டாள். அப்போது கனவில் ஒரு உருவம் தோன்றியது. "கவலைப்படாதே. நவாப்பைப் பார்த்து நீ சவால் விடு. அவனைப் போட்டிக்கு அழைத்து அதில் வெற்றிபெறும்படி கூறு. போட்டி என்னவென்றால்... நீ ஓரிடத்தில் இருக்கவேண்டும். நவாப் அருகில் வந்து உன்னைத் தொடவேண்டும்'' என்று அந்த உருவம் கூறிவிட்டு மறைந்தது. காலையில் எழுந்தபோது, சிறுமியின் நெற்றியில் ஒரு திலகம் இருந்தது. அந்த செந்தூரத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நவாப்புக்கு தகவல் சென்றது.

அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அவன், சிறுமியின் தந்தையை விடுதலை செய்தான். தன் சிப்பாய்களுடன் நவாப், சிறுமியின் வீட்டிற்குச் சென்றான். அந்தச் சிறுமி நடக்க ஆரம்பித்தாள். அதற்குமுன்பு தன் கைகளால் அவள் சுவற்றில் செந்தூரத்தைப் பதித்தாள். பின்னர் அவள் ஓட ஆரம்பிக்க, அவளை குதிரையில் அமர்ந்து விரட்டினான் மன்னன். ஆனால் அவளோ மிகவும் வேகமாக ஓடினாள். மன்னனால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. சிறுமி கடவுளை வேண்ட, அங்கொரு சிங்கம் தோன்றியது. அதன்மீது அமர்ந்த சிறுமி, அங்கிருந்து மோர்கானாவுக்குப் பயணித்தாள். அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டாள்.

அவளுக்குமுன் தோன்றிய சிவபெருமான் ஒரு இடுக்கியைத் தூக்கிப் போட, பூமி இரண்டாகப் பிளந்தது. சுஸ்வாணி சிங்கத்துடன் பூமிக்குள் செல்ல, பிளந்த பூமி மூடிக்கொண்டது. அவள் அணிந்திருந்த புடவையின் ஒரு சிறியபகுதி பூமிக்குமேலே இருந்தது. அதைப் பிடிக்கமுயன்ற நவாப்பும் அவனுடைய ஆட்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்தனர்.

மோர்கானாவில் அப்போதிருந்த மரம் இப்போதும் இருக்கிறது. 1232-ஆம் ஆண்டில் சக்திதாஸ், அவரது தம்பி மால்காதாஸ் ஆகியோரின் கனவுகளில் தோன்றிய சுஸ்வாணி, அந்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கூறினாள். கோசாலையிலிருக்கும் புதையலை எடுத்து அதற்காக செலவிடும்படி சொன்னாள். அதைத் தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டது. கிணறு தோண்டப்பட்டது. கோசாலை பெரிதாகக் கட்டப்பட்டது.

பாரதத்தில் இந்த சுஸ்வாணி அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் நாகூர், ஜோத்பூர், கன்வாலியாஸ், மேற்கு வங்காளத்தில் ராஜாரட், தமிழகத்தில் விழுப்புரம், கர்நாடகாவில் அட்டிபெலே, மகாராஷ்டிரத்தில் அன்டர் சூல் ஆகிய இடங்களில் அன்னை சுஸ்வாணிக்கு கோவில்கள் இருக்கின்றன.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் பிக்கானிருக்குப் பயணிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வியாழக்கிழமை அனுவ்ராட் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னை வழியாகச் செல்கிறது. பிக்கானிரிலிருந்து மோர்கானா 43 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

Next Story

அதிசயம் நிகழ்த்தும் சோழதரம் அங்காள பரமேஸ்வரி !

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 solatharam angala parameswari temple

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சக்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகிலத்தைப் படைத்த ஆதிசக்தி சிவனை கணவராக அடைந்தாள். அதனால்தான் 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்கிறோம். இருவரும் இணைந்தால்தான் உலக இயக்கமே நடைபெறும். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்ததுதான் சிவசக்தி. அதனால்தான் உலகம் சமநிலையுடன் இயங்கி வருகிறது.

உலகின் அடித்தளமே சக்தி வடிவமாய் அமைந்துள்ளது. உலகெங்கும் வாழும் அனைத்துயிர்களுக்கும் உயிர் கொடுத்து வாழ வைப்பது சக்தி. மனிதர்கள், 'நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன்; அதை சாதித்தேன் இதை சாதித்தேன்; உழைத்தேன் உயர்ந்தேன்' என்று பேசுவதைக் காண்கிறோம். ஆனால் அப்படிச் செய்ய ஊக்கப்படுத்துவது சக்திதான் என்பதைப் பலரும் அறிவதில்லை. யோகம், தியானம், இறை வழிபாடு என ஆன்மீகப் பாதையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்குத் தங்களை இயக்குவது சக்தியென்பது புலப்படும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்து வரும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருமே ஆதிசக்தியின் அம்சமாகவே கருதப்படுகின்றனர்.

ஒவ்வொரு மனித உடலும் சக்தியால் தான் இயங்குகிறது. உடலை விட்டு சக்தி வெளியேறிவிட்டால் உடல் சவமாகி விடுகிறது. எனவேதான் ஆதிசக்தி வடிவமான பெண் தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். ஒரு குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு அந்தக் குடும்பத்திலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையளிப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும், பிறந்த வீட்டுப் பெண்ணை வேறிடத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் கூட அவர்களை வரவழைத்து குடும்ப நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கச் சொல்வார்கள். திருமணச் சடங்கு நடைபெறும்போது மணமக்களுக்குப் பின்புறம் கையில் விளக்கேந்தி பிறந்த வீட்டுப் பெண் நின்றிருப்பாள். இப்படித் தங்கள் வீட்டில் பிறந்த பெண்ணை முதல் தெய்வமாக முன்னிருத்தி வருகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களை சக்தி வடிவமாகப் பார்ப்பதுதான்.

ஆதிசக்தி அநீதிகளைச் செய்யும் அரக்கர்களை அழிக்க பல்வேறு உருவங்களில் தோன்றியுள்ளாள். அப்படிப்பட்ட பராசக்தியை அங்காளம்மன், மகிஷாசுரமர்த்தினி, துர்க்கை, காளி, மாரியம்மன், எல்லையம்மன், பிடாரியம்மன், சுடலையம்மன், அகிலாண்டேஸ்வரி, கருமாரியம்மன், வெக்காளியம்மன் எனப் பல்வேறு வடிவங்களில், பெயர்களில் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பொதுவாக ஆதிசக்தி பீடங்கள் 108 என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி தமிழகமெங்கும் அம்மனுக்குப் பல்வேறு பெயர்களில் கோவில்கள் உள்ளன. மலேசியா, மியான்மர் போன்ற கடல் கடந்த நாடுகளிலும் அம்மன் கோவில்கொண்டு பக்தர்களைக் காத்து வருகிறாள்.

ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழிபட்டு வந்த கோவில்கள் பல்வேறு அரசர்கள் நாடு பிடிக்கும் ஆசையால் படையெடுத்துச்சென்று போர் நடத்தியதன் காரணமாகவும், பூகம்பம் போன்ற பேரழிவுகளாலும் பல கோவில்கள் அழிந்து போயின; பூமிக்குள் புதையுண்டன. அப்படிப்பட்ட கோவில்களில் இருந்த தெய்வங்கள் தங்களை எப்போது வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் - தங்களை மக்கள் வழிபட வேண்டுமென்று எண்ணுகிறார்களோ, அப்போது அவர்கள் மக்களின் பார்வைக்கு வெளிப்பட்டே தீருவார்கள். பல்வேறு பணிகளுக்காக மக்கள் நிலத்தைத் தோண்டும்போது தெய்வச் சிலைகள் பூமியிலிருந்து கிடைக்கப்பெற்று கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் அங்காள பரமேஸ்வரியம்மன் பூமிக்குள்ளிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்டுள்ளாள். கடலூர் மாவட்டம், சோழதரம் என்னும் ஊரில் இந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

இந்த ஊரின் மையப் பகுதியில் பூமிக்குள் புதையுண்டும், செடி கொடிகளில் சிக்குண்டும் கிடந்த தெய்வங்களை வெளியே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து, சிறிய அளவில் கோவில் எழுப்பி வழிபாடு நடத்தி வருகிறார் பெரியவர் ஜெயராம கொண்டியார். அதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது "ஆதிமனிதன் கல்லையெடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டையழித்து ஊராக்கி, தான் வாழ்ந்த இடத்தில் கோவிலைக் கட்டினான்.

 solatharam angala parameswari temple

அந்த தெய்வங்களுக்கு விழா எடுத்தார்கள். தாலாட்டு பாடினார்கள். கொண்டாடினார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களில் ஒன்றான அங்காள பரமேஸ்வரி இந்த ஊரில் கோவில் கொண்டிருந்திருக்கிறாள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் ஒன்று இப்பகுதியில் புதையுண்டு கிடந்துள்ளது. இங்கு பூமிக்கடியில் தெய்வங்கள் இருப்பது எனக்குத் தெரிய வந்ததே ஒரு அதிசயம்.

சில ஆண்டுகளுக்குமுன்பு என் கனவில் செவ்வாடை கட்டி அம்மன் உருவில் வந்த பெண் ஒருவர், 'இந்த இடத்தில் பூமிக்கடியில் புதையுண்டு கிடக்கும் என்னையெடுத்து வழிபாடு செய்; உன்னையும் எம்மை வணங்கும் மக்களையும் பாதுகாப்பேன்' என்று கூறிவிட்டு மறைந்தார். அது கனவா நனவா என புரியாமல் தவித்தேன். கனவில் அம்மன் கூறியபடி இந்த இடத்திற்கு வந்தேன். பாழடைந்து புதர் மண்டிக்கிடந்த இடத்தை எந்திரம் கொண்டு தூய்மை செய்யும்போது, கனவில் அம்மன் கூறியபடியே தெய்வங்களின் சிலைகள் கிடைத்தன. அவற்றை ஓரிடத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்தேன். பல்வேறு தொந்தரவுகளுக்கு இடையிலும் தெய்வச் சிலைகளைப் பாதுகாத்தேன். வெளிச்சமில்லாமல் இரவு நேரத்தில் படுத்திருந்தபோது என் மீது பாம்புகள் ஊர்ந்து சென்றன. தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகள் நடமாடின. அவற்றிடமிருந்து அங்காளம்மன் கருணையால் உயிர்பிழைத்தேன்.

இப்படி கடும் சிரமத்துக்கிடையே இந்த தெய்வங்களை ஒருசேர அமைத்து, ஊர்மக்களின் உதவியோடும், குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தினரின் ஆதரவோடும் வழிபாடு நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் அம்மனின் அருளால் இந்தக் கோவிலை நவீனப்படுத்துவார்கள். அவர்களுக்கு அன்னை அங்காள பரமேஸ்வரி அதற்கான சக்தியைக் கொடுப்பார்.

அங்காள பரமேஸ்வரிக்கு பரிவார தெய்வங்களாக பாவாடைராயன், சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரசாமி, பேச்சியம்மன், குழந்தையம்மன், பொம்மியம்மா ஆகிய தெய்வங்கள் வெளிப்பட்டன. அவர்களே இங்கு கோவில் கொண்டுள்ளனர். அங்காள அம்மனின் அருளைத் தெரிந்துகொண்ட பக்தர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவதோடு, அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெறுவதற்கும், அமாவாசை, பௌர்ணமி பூஜைகளின்போது அன்னதானம் வழங்கவும் உதவிகளைச் செய்துவருகிறார்கள். எந்தவொரு தெய்வமும் பக்தர்களைக் காக்க யார் மூலமாகவோ தங்களை வெளிப்படுத்தியே தீருவார்கள். அப்படிதான் இங்குள்ள அங்காள பரமேஸ்வரியும் அவரது துணை தெய்வங்களும் தோன்றியுள்ளனர்'' என்றார்.

இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனை குலதெய்வமாக வழிபடும் வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ரங்கநாதன், "இந்த அம்மனை குலதெய்வமாக வழிபட்டுவந்த எங்கள் முன்னோர்கள் சோழநாட்டின் மையப் பகுதியிலுள்ள இந்த ஊரில் வாழ்ந்து வந்துள்ளனர். அதனால்தான் இந்த ஊருக்கு சோழமாநகரம் என்று பெயர் இருந்தது. காலப்போக்கில் மருவி சோழதரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழ்ந்த எங்களது முன்னோர்கள் காலத்தில், சோழநாட்டின்மீது அந்நியர் படையெடுப்பால் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அப்படிச் சென்றவர்கள் மேலத்தத்தூர், திருமூலஸ்தானம், பொய்யூர், பொன்னன் கோவில், வலசக்காடு, நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருச்சி, கடலூர், சிதம்பரம் என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த காலங்களில் எங்கள் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரியை வழிபட முடியாமல் தவித்துவந்தனர்.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் எங்கேயோ இருந்த ஜெயராமன் கொண்டியார் கனவில் அம்மன் தோன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அப்போது முதல் குலதெய்வ வழிபாடு செய்யும் எங்களது வம்சாவளியினர் பல்வேறு ஊர்களிலிருந்தும் இங்குவந்து அம்மனையும் அவரது பரிவார தெய்வங்களையும் வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த தெய்வங்களுக்கு ஒரு கோவில் எழுப்பி அதில் புதிதாகப் பிரதிஷ்டை செய்ய முயற்சித்து வருகிறோம்.

இங்குள்ள தெய்வங்களை வழிபடுவோருக்கு இடர்கள், சிக்கல்கள் அனைத்தும் சிதறியோடும். திருமணத்தடை உள்ளவர்கள் திருமணமாகி சந்தோஷமாக வாழ்கிறார்கள். மகப்பேறில்லாத தம்பதிகள் அம்மனை வழிபட்டு குழந்தைப் பேறு கிடைத்துள்ளது. பல்வேறு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துவைத்துள்ளார் அங்காளம்மன்'' என்றார். பொதுவாக தெய்வங்களை "மூர்த்தி பெரிதா கீர்த்தி பெரிதா' என்பார்கள். இங்குள்ள அம்மனின் கீர்த்தி மிகப்பெரிய அளவில் பக்தர்களிடையே பரவிவருகிறது.

அமைவிடம்: விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு உள்ளது. அங்கிருந்து தெற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் சோழதரம் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.