மனிதர்கள் எப்போதும் நிம்மதியான உணர்வுடன் இருக்கவே ஆசைப்படுவார்கள். அப்படி மனநிம்மதி இல்லாமல், எப்போதும் பரபரப்புடன் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகளும் இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் மனபலத்திற்கான கிரகம் சூரியன் சரியாக இருந்தால், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவர் தைரியத்துடனும், நிம்மதியுடனும் இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால், அந்த ஜாதகர் மிகுந்த தைரியசாலியாக இருப்பார். லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்தால் மனநிம்மதி இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பார். ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக அல்லது நீசமாக இருந்தால்- 2-ஆம் அதிபதி கெட்டுப்போயிருந்தால், அவருக்கு குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் கடன் வாங்கி, அவருக்கு பிரச்சினையைத் தருவார்கள். சந்திரன் பலமில்லாமல் இருப்பதால், அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. மனஅமைதி இருக்காது.
ஜாதகத்தில் 3-க்கு அதிபதியான கிரகம் 2-ல் இருந்து அதை பாவ கிரகம் பார்த்தால், அவருக்கு சகோதரர்களால் பிரச்சினைகள் உண்டாகும். அதனால் அவருக்கு மனநிம்மதி இருக்காது. சரியாகத் தூக்கம் வராது. எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பார். 12-ல் சந்திரன் இருந்து, 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், அவருக்கு சரியாகத் தூக்கம் வராது. தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பார். எல்லா விஷயங்களுக்கும் கோபப்படுவார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்படும். மனநிம்மதி கெடும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி 2-ல் இருந்தால், இளம்வயதிலேயே அவருக்குப் பிரச்சினைகள் இருக்கும். சரியாகப் படிக்க முடியாமல் போய்விடும். அதனால் சாதாரண வேலை பார்த்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவர். மனதில் சந்தோஷம் இல்லாமல் இருப்பார். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு அல்லது சுக்கிரன், புதன், ராகு அல்லது சூரியன், சுக்கிரன், சனி 8-ல் இருந்தால், அவர் பல பிரச்சினைகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பார். மனதில் அமைதி இருக்காது. திருமண வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுக்குடும்பத்தில் அவரால் வாழமுடியாது. பலர் அலைந்து திரியும் வேலைகளைப் பார்ப்பார்கள். அதன் காரணமாக மனக்கவலையுடன் காட்சியளிப்பார்கள். சந்திரனுக்கு முன்பும் பின்பும் பாவ கிரகங்கள் இருந்தால், அந்த மனிதருக்கு பாவ கர்த்தாரியோகம் உண்டாகும். அதனால் மனஅமைதி இருக்காது.
சந்திரனும் சனியும் சேர்ந்து 5-ல் இருந்தால், அவருக்கு மனநிம்மதி இருக்காது. சந்திரனும் சனியும் சேர்ந்தால், விஷ யோகம் உண்டாகும். 5-ஆம் பாவத்தில் விஷ யோகம் இருந்தால், அவர் பலவிதமான சிந்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அதனால் சரியாகத் தூக்கம் வராது. மனதில் அமைதியே இல்லாமல் இருப்பார். ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருந்து அதை குரு பார்த்தால் அல்லது லக்னத்திலிருந்து கேந்திரத்தில் குரு இருந்தால் அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எதையும் தாங்கிக்கொள்வார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் சுயவீட்டில் அல்லது உச்சமாக இருந்தால் அல்லது சந்திரனை குரு பார்த்தால் அல்லது சந்திரனிலிருந்து கேந்திரத்தில் குரு இருந்தால், அந்த மனிதர் நல்ல மனஅமைதியுடன் இருப்பார். தூக்கம் சரியாக வரும். எப்போதும் நிம்மதியாக இருப்பார்.
பரிகாரங்கள்
தினமும் காலையில் கண் விழித்தவுடன், தன் உள்ளங்கையில் கடவுள்கள் இருப்பதாக எண்ணி, அதைப் பார்த்து வணங்கவேண்டும்.
உணவில் பித்தத்தை உண்டாக்கும் காரம், புளிப்பு, வறுக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றைக் குறைக்கவேண்டும்.
வடக்கு அல்லது மேற்கில் தலைவைத்துப் படுக்கக்கூடாது.
தினமும் சாப்பிட்ட பிறகு சிறிது வெல்லம் சாப்பிட வேண்டும். அதனால் உணவு ஜீரணமாகும்.
தினமும் காலையில் சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். சிவலிங்கத்தின்மீது சிறிது தேனை ஊற்றி மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை கூறவேண்டும்.
லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிவது நல்லது.
வீட்டில் தேவையற்ற பொருட்கனை நீக்கவேண்டும். கறுப்பு நிற ஆடையைத் தவிர்க்கவும்.
தினமும் படுக்கும்போது சிவனின் பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும்.
கட்டிலுக்கு எதிரே முகம்பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.
தினமும் பசுவுக்கு உணவளித்து, அதைத் தொட்டு வணங்குவது நல்லது.
குருநாதர் மற்றும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது நன்று.
மேற்கண்டவற்றைக் கடைப்பிடித்தால் மனநிம்மதியுடன் சந்தோஷமாக வாழலாம்.