Skip to main content

செம்மையான வாழ்வருளும் செம்பனார் கோவில்! 

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

 Sembanar temple with pure life!

 

"காலம் கருதி யிருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

- திருவள்ளுவர்

 

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர் கலங்காமல் அதற்கேற்ற காலத்தைக் கருதி பொறுத்திருப்பர் என்கிறார்.மழை பெய்யவேண்டிய காலத்தில் மழை; வெயில் அடிக்கவேண்டிய காலத்தில் வெயில். அதுபோல அருள் புரியவேண்டிய காலத்தில் தெய்வமும் அருள் புரியும். சமஸ்தானம் ஒன்றில் அரசு வைத்தியராக இருந்தார் அடியார் ஒருவர். தினமும் அதிகாலை எழுந்து நீராடி சிவ வழிபாட்டை முடித்து, தன் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் ஏழை எளியோர்க்கு வைத்தியம் பார்ப்பதில் தலைசிறந்தவர்.

 

ஒருநாள் பெண்மணி ஒருவர் தனது பத்து வயது மகனுடன் வந்து, "ஐயா, கணவரை இழந்தவள் நான். இவன் என் பிள்ளை. பெயர் சொக்கலிங்கம். இவனுக்கு மூலநோய். என்ன வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. நீங்கள்தான் இவனைக் காப்பாற்ற வேண்டும்'' என வேண்டினார். "அம்மா, கவலைப்படாதே! பையனை இங்கேயே விட்டுச்செல். என் மகன்போல பார்த்துக்கொள்கிறேன். தெய்வ அருளால் இவன் நோய் குணமாகும். நீ காலணா கூட தரவேண்டாம்'' என ஆறுதல் சொல்லி அனுப்பினார். சிறுவன், அடியாரின் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று, மூன்று மாதங்களுக்குப்பின் நோய் முழுவதும் நீங்கி ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினான்.

 

முப்பது ஆண்டுகள் கடந்தன. சமஸ்தான மன்னர் இறந்துவிட்டார். சமஸ்தானத்தின் ஆட்சி ஆங்கிலேயர் கைக்குச் சென்றது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆங்கிலேய அதிகாரி, மறைந்த மன்னருக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்ப விரும்பினார்.அதற்காக ஊரிலுள்ள முக்கியஸ்தர்களை வரவழைத்து, "மறைந்த மன்னருக்காக நினைவுச் சின்னம் எழுப்ப விரும்புகிறேன். உங்களால் இயன்றதைத் தந்துதவுங்கள்'' என்றார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வைத்தியர், ஒரு லட்ச ரூபாய் தருவதாக வாக்களித்தார். ஊர்மக்கள் "இந்த வைத்தியரால் எப்படி லட்ச ரூபாய் கொடுக்கமுடியும்' என்று பேசிக்கொண்டனர்.

 

அந்த சமயத்தில் அந்த ஊருக்கு செல்வந்தனாகத் திரும்பி வந்தான் சொக்கலிங்கம். பொதுமக்களின் பேச்சு அவன் காதில் விழ, உடனே தன் காரியதரிசியை அழைத்து, ""அந்த வைத்தியர் மூன்று மாதம் என்னை வீட்டிலேயே தங்கவைத்து மருத்துவம் பார்த்தார். அவரால்தான் நோய் நீங்கி நலமாக இருக்கிறேன். அப்படிப் பட்டவருக்கு இந்த நேரத்தில் நாம் உதவவேண்டும். ஒரு லட்ச ரூபாயை பையில் கட்டி வையுங்கள். இதோ வருகிறேன்'' என்று கூறி வைத்தியரின் வீட்டிற்குச் சென்றான். அப்போது வைத்தியர் அங்கில்லை. வைத்தியரின் கணக்குப் பிள்ளையிடம், ""மன்னரின் நினைவுச் சின்னத்திற்காக லட்ச ரூபாய் தருவதாக வைத்தியர் வாக்களித்தாராமே? அவரால் எப்படி முடியும்?'' எனக் கேட்டான். அதற்கு அவர், "தெய்வம் எப்படியாவது உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாகவே உண்டு'' என்றார்.

 

வைத்தியரின் தெய்வ நம்பிக்கை வீணாகவில்லை. "சிறுவயதில் என் உயிரைக் காப்பாற்றியவர் அவர். என்னுடன் வாருங்கள்... அவர் கொடுக்க வேண்டிய லட்ச ரூபாயை நான் தருகிறேன்'' என்று கணக்குப் பிள்ளையை அழைத்துச்சென்று, லட்ச ரூபாய் அடங்கிய பையைக் கொடுத்தார். பின்னர் விவரமறிந்த வைத்தியரான அடியார், "நன்மை செய்தால் நன்மைதான் விளையும் என்பதற்கு இதைவிடவா உதாரணம் வேண்டும்?'' என்றார்.

 

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். ஆக, நல்லதைச் செய்தால் தெய்வம் ஏதாவதொரு ரூபத்தில் தேடிவந்து அருள் புரியும். அத்தகைய தெய்வம் குடி கொண்டுள்ள ஒரு திருத்தலம்தான் திருச்செம்பொன்பள்ளியில் உறையும் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.

 

இறைவன்: சுவர்ணபுரீஸ்வரர், செம்பொன் பள்ளியார்.

இறைவி: சுகந்த குந்தளாம்பிகை, மருவார் குழலியம்மை.

உற்சவர்: சோமாஸ்கந்தர்.

புராணப்பெயர்: திருச்செம்பொன்பள்ளி.

ஊர்: செம்பனார்கோவில்.

தீர்த்தம்: சூரிய தீர்த்தம், காவிரி தீர்த்தம்.

தலவிருட்சம்: வன்னி மரம், வில்வமரம்.

 

சுமார் 1,600 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 42-ஆவது தலமாகப் போற்றப்படுவதும், திருவிளையாடல் புராணத்திற்குத் தொடர்புடையதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளோடு பல்வேறு சிறப்புகளையும் பெற்றதொரு திருத்தலம்தான் சொர்ண புரீஸ்வரர் திருக்கோவில்.

 

"வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்

தேனார் செம்பொன் பள்ளி மேவிய

ஊனார் தலையிற் பலிகொண் டுழல் வாழ்க்கை

ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.'

-திருஞானசம்பந்தர்

தல வரலாறு

 

பிரம்மாவின் மானச புத்திரனான தட்சன் தன் மகள் தாட்சாயிணியை சிவபெருமானுக்கு மணம்முடித்துத் தந்தான். தனது அகந்தை யால் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்தான். அவனை நல்வழிப்படுத்த தாட்சாயிணி திருப்பறியலூருக்குச் சென்றபோது, சிவனையும் சக்தியையும் நிந்தித்தான் தட்சன். தாட்சாயிணி கோபம்கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டுமென்று சபித்தாள். அதே வேளையில் சிவபெருமானானவர் வீரபத்திரர், பத்ரகாளி ஆகியோரைத் தோற்றுவித்து அனுப்ப, அவர்கள் யாகத்தை அழித்தனர். வீரபத்திரர் தட்சனை சம்ஹாரம் செய்தார். தாட்சாயினியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்ணி மத்தியில் கடுந்தவம் புரிந்தாள். சிவனும் தாட்சாயிணிக்கு கருணைகாட்டி, "சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகிலிருந்து அருளாட்சி செய்' என்றருளினார்.

 

சிறப்பம்சங்கள்

 

✷ இங்குள்ள சிவலிங்கம், பதினாறு இதழ்களைக் கொண்ட தாமரை போன்ற ஆவுடைமீது அமைந் துள்ளது. சுயம்புமூர்த்தியான இவர் சுவர்ணபுரீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

✷ லட்சுமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி, செம்பொன்பள்ளி என்று பல பெயர்கள் இத்தலத்துக்கு இருந்தாலும், நடைமுறையில் செம்பனார் கோவில் என்றே அழைக்கப் படுகிறது.

 

✷ சோழ மன்னர்கள் இந்த கோவிலைக் கட்டிப் புனரமைத்ததால் அதற்கு "செம்பியன்' என்ற பெயர் வந்தது. பள்ளி என்றால் கிராமம் என்றொரு பொருளுண்டு. எனவே செம்பியன்பள்ளி எனப்பட்டது. சிவனின் கருவறை கோபுரத்தின் கூரை தங்கத் தாள்களைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. அதனால் திருசெம்பொன்பள்ளி என்றாயிற்று.

 

✷ இத்தல மூலவர் ஒருகாலத்தில் தங்கத்தைப்போல பிரகாசித்ததால் இறைவன் செம்பொன்பள்ளியார் என்று புகழப் படுகிறார். குலோத்துங்கச் சோழன், ராஜராஜன், சரபோஜி ராஜகாலத்திய ஆறு கல்வெட்டுகள் ஆலயத்தில் உள்ளன.

 

✷ இத்தல இறைவி சுகந்த குந்தளாம்பிகை, இரண்டு கரங்களே உடையவளாய் நின்றநிலையில் அருள்கிறாள்.புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்தளாகி, சுகந்தவன நாயகி, மருவார்குழலி என்ற பெயர்களும் உண்டு.

 

✷ ரதிதேவி தனது கணவர் மன்மதனைத் திரும்பப்பெற வழிபட்ட தலங்களில் திருச்செம்பொன்பள்ளியும் குறிப்பிடத்தக்கது.

 

✷ இங்கு ஒரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால், பெண்கள் புதிய நகைகள் மற்றும் ஆபரணங்களை வாங்கியபிறகு முதலில் அவற்றை சுகந்தா தேவிக்கு சமர்ப்பித்த பின்னரே அணிந்துகொள்கிறார்கள். எதிர்காலத்தில் அதிக பொன் நகைகள் சேரும் என்பது அவர்கள் நம்பிக்கை.

 

✷ காரணாகம விதிப்படி காலபூஜைகள் சரியாக நடக்கும் இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின்கீழ், நிர்வாக அதிகாரியின் கண்காணிப்பில் நன்கு இயங்கிவருகிறது.

 

✷ சித்திரை மாதம் 7-ஆம் நாள்முதல் 18-ஆம் நாள்வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின்மீது படுவது மிகவும் விசேஷம். இந்த நாட்களில் சிறப்புப் பூஜைகளும், ஒன்பது நாள் பெருந்தேர்த்திருவிழா "சவுர மகோற்சவம்' என்னும் பெயரிலும் கொண்டாடப் படுகிறது.

 

✷ மகாலட்சுமி இங்கு தவமிருந்து திருமாலைக் கணவராக அடையப்பெற்றதால் இத்தலம் லட்சுமிபுரி என்று பெயர்பெற்றது.

 

✷ இந்திரன் சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனைப் பூஜித்து விருத்திராசுரனை வெல்ல வஜ்ஜிராயுதம் பெற்றதால் இந்திரபுரி என்று பெயர் வந்தது.

 

✷ முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நற்போதனைகளை எடுத்துக்கூறினார். இதனால் இங்குள்ள முருகன் கையில் அட்ச மாலையுடன் காட்சிதருகிறார். முருகன் இத்தல ஈசனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்ற பெயருண்டு.

 

✷ தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு பயிற்சியை ஆரம்பிப்பது சிறப்பு.

 

✷ வட்டவடிவமான ஆவுடை யாருள்ள இம்மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர். சித்திரை மாத அமாவாசையிலும் வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி சந்தோஷம் பிறக்கும்.

 

✷ சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் நடக்கின்றன. குறிப்பாக சித்திரை மாத சூரியபூஜை, ஐப்பசி அன்னா பிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், மாசி சிவராத்திரி, மார்கழி திருவாதிரை போன்றவை வெகு சிறப்பாக இருக்கும்.

 

✷ இங்குள்ள சப்தமாதர்கள் மிகவும் பிரசித்தம். மணமாகாத பெண்கள் இந்த சப்தமாதர்களைப் பூஜித்து ஏழு ரவிக்கைத் துண்டுகளை (ஏழு நிறங்களில்) படைத்து, அதை ஏழு சுமங்கலிப் பெண்களுக்கு இனிப்புடன் வழங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும்; வாழ்வு வளமாகும் என்பது நம்பிக்கை.

 

✷ திருவிளையாடல் புராணத்திற்குச் சம்பந்தப்பட்ட தலமாதலால் இங்கு பிரதோஷ பூஜை சிறப்பானது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்திற்கும் வெவ்வேறுவிதமான பலன்கள் உண்டு. குறிப்பாக ஞாயிறு பிரதோஷம் மிகவும் உன்னதமாகக் கருதப்படுகிறது.

 

ஆலயத்தொடர்புக்கு: நிர்வாக அதிகாரி, சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அஞ்சல், நாகை மாவட்டம்- 609 309.அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் செல்லும் சாலையில் (ஆக்கூருக்கு முன்னதாக) பத்து கிலோ மீட்டர் தொலைவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உண்டு.


- கோவை ஆறுமுகம் 

 

 

 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.