அடிகளார் மு அருளானந்தம்
மழையை ஆளுமை செய்த காராளன், ஆதித்தமிழினத்தின் பேரறிவாளனாகத் திகழ்ந்தான். தான் உருவாக்கிய நீர்காத்த அய்யனார் கோவில் நுழைவாயிலின் மேற்புறத்தில் மூன்று மாங்கனிகளின் உருவத்தைப் பொறித்தான். ஏனென்றால், தனது ஊர் செழிப்பாக மாறியதற்கு ஆணிவேர்களாக இருந்தவர்கள் மூன்று பேர். அவர்களில் முதலாமவர் தனது மூதாதையரான, குளம் மற்றும் கண்மாயை உருவாக்கிய காராளன், இரண்டாமவர் மடையன், மூன்றாமவர் காலாடி. இம்மூவரும் மக்களின் மனதில் என்றென் றும் இதயக்கனிகளாக வீற்றிருப்பதைக் குறிப்பிடும் விதத்தில்தான் மூன்று மாம்பழங்கள் பொறிக்கப்பட்டன.
வண்டுகளை வாழவைக்கும் மாம்பழம்!
பழங்களில் பல வகைகள் இருக்கும் போது மாம்பழங்களைத் தேர்ந்தெடுத்தது ஏனென்றால், கண்மாய்களுக்கும் நீர்வரத்துள்ள மலைச்சரிவுகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் செழிப்பாக வளரக்கூடியவை மாமரங்கள்தான். அப்பகுதி மக்களுக்கு மிகவும் பரிட்சயமான மாம்பழமானது, தன்னுள் உயிர் வாழும் வண்டுகளை அழித்துவிடாமல், கருவறைக் குள் வைத்துக் காப்பதுபோல் காத்து, அதனை வளர்க்கின்றன. அதேநேரத்தில், சுவையிலும் குறை வைப்பதில்லை. அது போல், அடிப்படையில் கருவாக இருந்து, தம் மக்களின் வாழ்க்கையைச் சீரமைத்ததில் முக்கிய பங்கு வகித்த மூவர் என்பதால், அவர்களின் சிறப்பை மாம்பழத்தோடு ஒப்பிட்டனர்.
வளர்ச்சிக்கு வித்திட்ட வாகை!
நீர்காத்த அய்யனார் கோவில் அருகில் அதிக எண்ணிக்கையில் வாகை மரங்களை வளர்த்தனர். ஏனென்றால், முதன்முதலில் சக்கரம் செய்யும் சூத்திரத்துக்கேற்ப வாகை மரங்களையே பயன்படுத்த முடிந்தது. இச்சூத்திரத்தை உபயோகித்துதான், குயவத் தொழிலுக்குத் தேவையான சக்கரங்களும், போக்குவரத்துக்குப் பயன்பட்ட மாட்டு வண்டிகளும், சிறிய பயணியர் கூட்டு வண்டிகளும் உருவாக்கப்பட்டன. இதன் பிறகே, தொழில் மற்றும் நாகரிக வளர்ச்சியில் உன்னத நிலை ஏற்பட்டது. மேலும், விவசாயக் கருவிகளையும், மடை அடைப்பதற்குத் தேவையான பலகைகளையும் வாகை மரத்திலிருந்து எளிதாக உருவாக்கினார்கள். வாகை மரங்களின் இந்தப் பயன்பாட்டி னால் தம் இனம் செழுமையாக வாழ்ந்து வருவதை உணர்ந்தனர். அத னாலேயே, போரில் வெற்றிகண்டு, மக்கள் காப்பாற்றப் பட்டு, அதனைக் கொண்டாடிய வேளைகளில், வெற்றியின் அடையாளமான வாகைப்பூவைச் சூடி மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்கள் தமிழர்கள்.
செட்டியம் எனப்படும் வியாபாரம்!
போக்குவரத்துக்குப் பயன்படும் வகையில் மரத்தாலான வண்டிகளை உருவாக்கிட தமிழர்கள் கற்றுக்கொண்ட பிறகுதான், ஒவ்வொரு ஊரிலும் விளைவிக்கப்பட்ட தானியங்கள், மண்பாண்டங்கள், மரச் சாமான்கள் போன்றவை பெருநகரப் பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, பண்ட மாற்று முறையில் ‘செட்டியம்’ என்ற வியாபாரம் தொடங்கலாயிற்று. செட்டியத் தொழிலைச் செய்தவர்கள் செட்டியார்’ என்று அழைக்கப்பட்டனர்.
கால் ஓட்டமாகச் சென்று காத்த ஓடுகாலன்!
ஒரு ஊரிலிருந்து செட்டியத்திற்காக பல மைல் தூரம் மாட்டு வண்டிகளில் பயணிக் கும்போது, கள்வர்கள் இடைமறித்துக் கொள்ளையடித்துவிடாமல் பாதுகாப் பதற்காக, ஈட்டிகளைக் கையிலேந்தியவாறு, உடல் வலிமைமிக்க பாதுகாவலர்கள், கால் ஓட்டமாகவே வண்டிகளின் முன்னும் பின்னும் காவலாகச் செல்வார்கள். பாது காவலர்களின் இந்த நேர்மையான செயல் பாட்டால், செட்டியமும் போக்குவரத்தும் சிறப்புற்றன. இவர்களை, ஓடுகாலர்கள் என்று மக்கள் அழைத்தனர். பின்னாளில் இவர்கள் நினைவுகூரப்பட்டு, ஓடுகால் கருப்பணன்’ என்ற பெயரில் வழிபடப்பட்டனர்.
உயிர்த்தியாகம் செய்த நொண்டிக் கருப்பணன்!
பெண் ஒருத்தியைத் தொலைவிலுள்ள ஊரில் திருமணம் செய்து கொடுக்க நேர்ந்தால், உறவினர்கள் ஒன்றுகூடி பல கூட்டு வண்டிகளில் ஏறி, ஓடுகாலர்களின் காவலோடு திருமணம் நடக்கின்ற ஊருக்குச் செல்வார்கள். அப்போது எங்கெல்லாம் வழிப்பறி கொள்ளையர்களின் தொந்தரவுகள் இருக்குமோ, அங்கெல்லாம் பயணிகளைக் காக்கும் பொருட்டு, கூடாரமிட்டு தங்கிப் பணி செய்தனர் வீரம் மிகுந்த முல்லை நிலத்து வீரர்கள். ஓரிடத்தில் நிலையாகத் தங்கி காவல் காப்பதை நொண்டியம்’ என்றனர். பயணியர்களுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை, ‘நொண்டிக் கருப்பணன்’ எனப் பெயரிட்டு வழிபட்டனர்.
பெருவழிப்பாதை! கணவாய் கருப்பண்ணசாமி!
ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத் துக்குச் செல்லும் வழித்தடங்களே பெரு வழிப்பாதை ஆகும். இப்பெருவழிப் பாதை யின் குறுக்காக மலைத்தொடர் இடைப் படும்போது, அம்மலைத்தொடரின் உயரம் குறைவான பகுதியில், மலையை வெட்டியெடுத்துப் பாதையை உருவாக்கினர். இதுதான் கணவாய். இந்தக் கணவாயைக் கடக்கும்போது முதலில் அப்பாதை உயரமாகவும், பின் தாழ்வாகவும் செல்லும்.
பாரம் ஏற்றப்பட்ட வண்டிகள், இவ் வழியே செல்லும்போது, இழுக்க முடியாமல், மாடுகள் வெகு சிரமப்படும். அந்த நேரத்தில் உடற்கட்டான முல்லை நிலத்து வீரர்கள், மாட்டு வண்டிகள் கணவாயைக் கடந்து செல்வ தற்கு உதவியாக, வண்டிச் சக்கரங்களைப் பிடித்துத் தள்ளிவிடுவார்கள். கணவாயில் கீழ்நோக்கிச் செல்லும்போது, வண்டியின் பாரம் மாடுகளை அழுத்தாமல் இருப்பதற் காக, மாடுகளின் கழுத்தை ஒட்டியிருக்கும் "மேல்கால்' என்ற பகுதியைப் பிடித்து, மெல்ல மெல்ல சாலைவழியே கீழிறங்கிச் செல்வதற்கும் உதவுவார்கள். இதுபோன்ற இடங்களில்தான் மிகக் கொடூரமான கொள்ளைகள் நிகழும். அதனால், சிறந்த போர்த்தந்திரத்தைக் கற்றுணர்ந்த முல்லை நில வீரர்கள், இரவு பகல் பாராது கண வாய்ப் பகுதிகளில் காவல் இருப்பார்கள். இவர்கள் மிகமிக நேர்மையானவர்களாக இருந்தாலும், திருடர்களைப் பிடித்தால் அந்த இடத்திலேயே கொன்றுவிடக்கூடிய குணம் படைத்தவர்கள். இவர்களின் அருமையை உணர்ந்த பயணியர், கண வாயைக் கடந்து செல்லும்போது பரிசு களையும் உணவுப் பொருட்களையும் தந்து மகிழ்வார்கள். இவ்வீரர்களைத்தான் பின்னாட்களில் ‘கணவாய் கருப்பண்ணசாமி’ என்று வழிபட்டார்கள் மக்கள்.
கொத்தளத்தில் நின்று காத்த சங்கிலிக்கருப்பர்!
மருதநில நகர்ப்புறத்தில் கோட்டை கட்டி, அதனைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண் எழுப்பினார்கள். கோட்டையைத் தாண்டி எதிரிகள் வராமல் இருப்பதற்காக, சுற்றிலும் மிக ஆழமான அகழிகள் தோண்டி, அவற்றை ஆற்று நீரால் நிரப்பி, கொடூரமான முதலைகளை வளர்த்தார்கள். கோட்டை நுழைவாயிலை ஒட்டி, கருமருத மரத்தால் உருவாக்கிய பெரும் மரப்பாலத்தை பெரிய சங்கிலியால் பிணைத்தார்கள். கோட்டைச் சுவரின் உட்புறத்திலிருந்து இயந்திரத்தால் இயக்கி, அதைக் கீழிறக்கிப் பாலமாகச் செயல்படுத்தினர். மீண்டும் தூக்கப்படும்போது பாலம் துண்டிக்கப்படும். கோட்டைக்குள் யாராவது வரும்போதுதான் மரப்பாலம் இவ்விதத்தில் இயக்கப்படும்.
அதே நேரத்தில், மழையிலும் வெயிலிலும் கோட்டைச் சுவரின் மேல்பகுதியில் உள்ள பாதுகாப்புக் கொத்தளத்தில் நின்றவாறு வீரர்கள் மாறாது பணிபுரிந்தனர். இவர் களைத்தான் கோட்டைப் பகுதிகளில் சங்கிலிக்கருப்பர்’ என்ற பெயரில் வழி பட்டனர்.
முன்னோர் ஆத்மாக்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கை!
முல்லைநிலத்துக் காவலர்களை, தங்களின் உடன்பிறவா சகோதரர்களாகக் கருதிய மருதநிலப் பெண்கள், ‘கருப்ப அண்ணன்’ என்று அழைத்தனர். தங்களது இல்ல விசேஷ காலங்களில் அவர்களுக்குப் புது ஆடைகள் அளித்து மரியாதை செய்தனர். காவல் வீரர்களின் உடல் வலிமையைப் பேணிக் காப்பதற்காக ஆடு, கோழி, முட்டை போன்றவற்றோடு விருந்தளித்தனர். இன்றும் அந்த வழிமுறையைப் பின்பற்றுகிறோம். அவ்வீரர்களின் நினைவிடத்தில் விருந்தும் படைக்கிறோம்.
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள், நீதிநெறி வழுவாமல், அன்போடு நம்மைப் பாதுகாத்தனர். இன்றுவரையிலும் அந்த நல்ல ஆத்மாக்கள் நம்மைக் காத்து வருகின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கையினால்தான், அதே வழிபாட்டை இன்றும் தொடர்கிறோம்.
தொகுப்பு: சி.என்.இராமகிருஷ்ணன்