பாவமான மனிதர்களும் பாவம் செய்த மனிதர்களும் முதலில் செல்லும் இடம் கோவில். பக்தி இருப்பவர்கள் பற்றிக்கொள்ளும் முதல் நம்பிக்கை கோவில். ஊரே தங்களைக் கண்டு பயந்தாலும் கடவுளுக்கு அஞ்சும் மனிதர்கள் இங்கு ஏராளம். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள கீழ்குடி கிராமத்தில் இருக்கும் ஆதிபுரீஸ்வரர் கோவில் குறித்த சிலிர்க்கும் அனுபவங்களை அந்தப் பகுதி மக்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்தக் கோவிலின் நாயகன் ஆதிபுரீஸ்வரர். அம்மன் சௌந்தரநாயகி. கலை நுணுக்கத்துடன் கூடிய அழகிய வடிவுடையாள். கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் நீண்ட காலமாக சிதலமடைந்திருந்த இந்தக் கோவிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது 2009 ஆம் ஆண்டில். இந்தத் தலத்தை காவிரி வளநாடு என்றும் சொல்லலாம். உடல்நலக்குறைவு, மன அழுத்தம், குடும்பப் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் இங்கு வருகின்றனர். இங்கு வந்து பிரார்த்தனை செய்யும் மக்கள் தாங்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறியதாகக் கூறுகின்றனர். இந்தக் கோவிலில் வழிபட்டால் திருமணத் தடை, குழந்தையின்மை ஆகியவை நீங்கும் என்கின்றனர் மக்கள். நவகிரகத்தின் அதிபதியான சிவனே இங்கு வீற்றிருப்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. நவராத்திரி பூஜை, ஆடிப்பூரம் ஆகிய காலங்களில் இங்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு ஊரே செழிப்பாக மாறியது என்கிறார்கள் மக்கள். பங்குனி உத்திரத்தின் போது ஒரு வாரத்திற்கு சூரிய கதிர்கள் சிவனின் மீது படும். அதை நேரில் காண்பது மிகவும் சிறப்பு. கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் கூட இங்கு வந்து பிரார்த்தனை செய்த பிறகு குணமான கதைகள் இருக்கின்றன. ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இந்தக் கோவிலை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். திருமணம் நடக்க வேண்டுபவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், உடல்நலம், செல்வம் பெருக விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் தலத்திற்கு வந்து ஆதிபுரீஸ்வரரை வழிபட்டுச் செல்லலாம்.