Skip to main content

"பகவானே, என்னைக் காப்பாற்றுங்கள்''

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

பொற்குன்றம் சுகந்தன்

பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து உலகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவன். அவன் ஒரு சமயம்... மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான். அங்கே அவன் கண்களுக்கு பகவான் தென்படவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தான். அப்போது ஓரிடத்தில் பூமாதேவி தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான்.அவன் கண்களுக்கு உருண்டை வடிவத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதுபோல் தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அவள் அழகாக இருப்பதைக் கண்டான்.கண்ணிமைக்கும் நேரத்தில் அவளைத் தூக்கிக் கொண்டு பாதாள உலகம் விரைந்தான்.
 

perumal temple

"பகவானே, என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று பூமாதேவி அபயக்குரல் கொடுத்தாள். அந்தக் குரல் மகாவிஷ்ணுவின் காதில் விழுந்தது. பூமாதேவி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம்செய்து, பூமியைத் தன் கோரைப் பற்களால் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். ஸ்ரீவராகராய்க் காட்சிதந்த மகாவிஷ்ணுவை பூமாதேவி அன்புடன் பார்த்து ஆரத்தழுவினார். அதனால் மகிழ்ந்த வராகர் அவளைத் தானும் தழுவினார். இவ்வாறு அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்ட காலம் "தேவவருஷம்' என்கிறது புராணம். இருந்தாலும் அது அந்தி நேரம். அதன் விளைவாக ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பவுமன். இவனே பிற்காலத்தில் நரகாசுரன் ஆனான் என்கிறது புராணம்.

வராகப்பெருமாளுக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் உள்ளன. வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதியும் உண்டு. அந்த வகையில் கும்பகோணத்தில் ஆதிவராகர் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் மகாமகம் உண்டாவதற்குக் காரணமான பிரளய காலத்திற்கு முன்பாகவே இவர் இத்தலத்தில் எழுந்தருளி யிருந்தார். எனவே, இவரை "ஆதிவராகர்' என்று போற்றுகின்றனர். இவரே இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்திருத்தலத்து ஆதிவராகமூர்த்தி ஆகிய ஐவரும் காவேரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.

perumal temple

இங்கு, மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி வராகரை வணங்கியபடி காட்சி தருகிறாள். வீடு, நிலம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அது தீருவதாக நம்பிக்கை. கோரைக்கிழங்கைப் பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை, நெய் கலந்து உருண்டையாகப் பிடித்து சுவாமிக்கு அமுதாகப் படைப்பது வழக்கம். இதனை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர்.இங்கு சுவாமி அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்ற கோலத்தில் தனது இடது பாதத்தை ஆதி சேஷன்மீது வைத்தபடி காட்சி தருகிறார்.