இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் அன்னையை "நகர்கோட் தேவி' என்றும் அழைக்கிறார்கள். "நகரக் கோட்டையின் தலைவி' என்று இதற்குப் பொருள். இந்த ஆலயம் காங்கடா என்னும் இடத்தில் இருப்பதால் இந்த அன்னை "காங்கடா தேவி' என்றும் அழைக்கப்படுகிறாள். இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் மிகப்பெரிய கோவில் இது.
ஆலய உச்சியிலிருக்கும் கலசத்தை மிகவும் தூரத்திலிருந்தே பார்க்கலாம். "துர்க்கா சாலீசா' என்ற நுலில் "மூன்று உலகங்களிலும் புகழ்பெற்ற அன்னை வஜ்ரேஸ்வரி” என்று எழுதப் பட்டிருக்கிறது. இந்த ஆலயம் பாண்டவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. கர்ப்பக்கிரகத்தில் தாய் பிண்ட வடிவத்தில் (உருண்டையாக) காட்சியளிக்கிறாள். இதுதவிர, பல கடவுள் சந்நிதிகள் இருக்கின்றன. அவற்றுள் பைரவர் பிரதானமாக வழிபடப்படுகிறார்.பாரதத்திலுள்ள 51 சக்தி பீடங்களில் இந்த ஆலயமும் ஒன்று.
சதிதேவியின் இடது மார்புப்பகுதி விழுந்த இடம் இதுவெனப் படுகிறது. அதனால் இப்பகுதி வஜ்ரேஸ்வரம் என்றும், அன்னை வஜ்ரேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். உலகில் பல பகுதிகளிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட வருகிறார்கள். நவராத்திரியின்போது ஏராளமான கூட்டம் இருக்கும்.
இந்த ஆலயத்தில் தினமும் ஐந்து முறை பூஜைகள் நடக்கின்றன. காலையில் சுப்ரபாத பூஜை நடக்கிறது. இரவில் அலங்காரத்துடன், மங்கள ஆரத்தி செய்யப் படுகிறது. பிறகு அலங்காரங்கள் நீக்கப்பட்டு பால், நீர், தயிர், நெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் தாயை அலங்கரித்து, புத்தாடைகள், நகைகள் அணிவித்து, பட்டாணி, பூரி, பழங்கள், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைப் பிரசாதமாக வைத்துப் பூஜை செய்கிறார்கள். மதிய வேளையில் யாருக்கும் தெரியாமல் ஒரு ரகசிய பூஜை செய்யப்படுகிறது.
இந்தப் பகுதியிலிருந்த ஜலந்தரன் என்ற அரக்கன் மக்களுக்குப் பல இன்னல்கள் கொடுத்தான். எல்லாரும் அன்னையிடம் முறையிட, அவள் தன் கையிலிருந்த வஜ்ராயுதத்தால் ஜலந்தரனைக் கொன்றாள். அதனால் இந்த தாய்க்கு "வஜ்ரஹஸ்த தேவி' என்றும் பெயர் ஏற்பட்டது. பகைவர்களை வெற்றிபெற நினைப்பவர்கள் இந்த அன்னையைத் தேடிவந்து வழிபடுகிறார்கள். இந்த ஆலயம் 10-ஆவது நூற்றாண்டில் புகழ்பெற்று, நல்ல செல்வாக்குடன் இருந்தது.
வெளிநாட்டினர் அவ்வப்போது வந்து கொள்ளையடித்திருக்கிறார்கள். 1009-ஆம் ஆண்டில் கஜினி முகமது இந்தக் கோவிலில் கொள்ளையடித்திருக்கிறான். அங்கிருந்த வெள்ளிக் கதவைக்கூட விட்டு வைக்கவில்லை. கஜினி மட்டுமே இந்தக் கோவிலை ஐந்து முறை குறிவைத்திருக்கிறான். 1337-ஆம் ஆண்டில் முகம்மது பின் துக்ளக்கால் இந்தக் கோவில் கொள்ளையடிக்கப்பட்டது. சிக்கந்தர் லோதி என்ற மன்னனும் இந்த ஆலயத்தைக் கொள்ளையடித்திருக்கிறான். ஆலயம் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.
அக்பர் இங்கு வந்து திருப்பணி செய்திருக்கிறார். 1905-ல் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆலயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு உண்டானது. 1920-ல் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்துக்களுடன் சீக்கியர்களும் முஸ்லிம்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் உச்சியிலிருக்கும் கோபுரம் இந்து, சீக்கிய, முஸ்லிம் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து "அந்தமான் எக்ஸ்பிரஸ்' விரைவு ரயிலில் "பட்டான் கோட்' சென்று, அங்கிருந்து 87 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காங்கடா ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், நகரத்துக்கு மத்தியில் அமைந்துள்ளது ஆலயம்.