'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழர்கள் காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கருதியவர்கள். தமிழர்கள் இலக்கியங்களை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாக வகுத்தவர்கள். காதலையும் வீரத்தையும் தமிழர்கள் மதித்தார்கள் என்பதை விட, தமிழர்கள் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்தார்கள். தான் கடைப்பிடித்தது மட்டுமல்ல. தாங்கள் வழிபடுகிற கடவுளும் காதலுக்கும் வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்கிற ஒரு பார்வை தமிழர்களுக்கு இயல்பாகவே இருந்தது.
எல்லாக் கடவுளையும் விட குமரனை, குன்றத்தூராடக் கூடியவனை, மன்றாடி மைந்தனை, மயிலேறும் வாகனனை தமிழ்நாட்டு மக்கள் கும்பிடுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். அவர் குடியிருக்கிற கோயிலுக்கு எல்லாம் அலை அலையாய், அணி அணியாய் புறப்பட்டு செல்லுகிறார்கள். ஆறுபடை வீடுகளிலே எண்ணச் சலிக்காத மக்கள் கூட்டம் நாளும் பொய்கிறது. அலைமேவும் கடலோரம் திருச்செந்தூரில், கடல் அலை ஆரவாரம் செய்வதைப் போல, மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் என்றால், காதலையும் வீரத்தையும் கண்ணாக மதித்தவர்கள். அதைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தார்கள்.
அம்மையப்பனாகக் கடவுளைப் பார்த்தவர்கள். அண்ணன், தம்பியாக கடவுளைப் பார்த்தவர்கள். முருகனைத் தன்னுடைய பண்பாட்டின் அடையாளமாகப் பார்த்ததினால் தான் வள்ளி - தெய்வானை திருமணத்திற்கு இந்த நாட்டில் ஒரு மரியாதை. தெய்வானையை மட்டும் மணம் செய்து கொண்டவன் அல்ல முருகன். காட்டுக்குறத்தி வள்ளியையும் காதலித்து மணம்புரிந்துக் கொண்டவன். ஆகவே, தாங்கள் அனுபவித்த காதலை, தாங்கள் துய்த்த காதலை இறைவன் மீதும் இணைத்துப் பார்த்த தமிழர்களுடைய நாகரீகம் மிகுந்த பண்பட்டது. அதைப் போலத்தான் வீரமும்.
வீரம் தான் தமிழர்களுடைய வாழ்க்கையில், அவரிடத்திலே மிச்சம் இருந்தது. தமிழர்களுடைய போர்க்குணம், உலகத்தையே திகைக்க வைத்தது. ஒரு காலத்தில் சிங்களத்தை, பிற்பகத்தை, சாவகத்தை, கட்கத்தில் வைத்து கட்டி ஆண்டவர்கள் தமிழர்கள். முருகன் போர் புரிந்தான். அசுரர்களின் அழிச்சாட்டியத்தால், அசுரர்களின் அட்டகாசத்தால், அசுரர்களின் ஆணவத்தால், அசுரர்களின் கொடுங்கோன்மையால், மக்கள் புன்மை தேரையாய் பொட்டுப் பூச்சியாய், புழுவாய் நெளிந்து கொண்டிருந்த காலத்தில், இந்த அசுரர்களுக்கு ஒரு முடிவுரை எழுத முருகா நீ வர மாட்டாயா என்று முருகனைக் கொண்டாடினார்கள். கும்பிட்டு மகிழ்ந்தார்கள்.
முருகனும் அந்த அசுரர்களுடைய அட்டகாசத்திற்கு முடிவுரை எழுதத்தான், அவனும் போர்க்களத்திற்கு வந்தான். இன்றைக்குக் கிழக்கு கடற்கரையில் இருக்கிற திருப்போரூர். போர் நடந்ததனால் தான், அதற்கு திருப்போரூர் என்று பெயர். அந்த போரிலே கலந்து கொள்வதற்கு முருகன் படைகளோடு புறப்பட்டுப் போகிற போது ஓய்வெடுக்க வேண்டும் என்று அவன் விரும்பிய போது ஒரு குன்றில் வந்து உட்கார்ந்தார். அதற்கு தான் குன்றத்தூர் என்று பெயர். அந்த குன்றத்தூருக்கு முருகன் வந்து உட்கார்ந்தது மட்டும் சிறப்பல்ல. அந்த குன்றத்தூரிலே இருந்து பிறந்தவர் தான் சேக்கிழார். அந்த சேக்கிழார் தான் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கதையாக எழுதியவர். காப்பியமாகத் தமிழுக்கு தந்தவர்" என்றார்.