Skip to main content

நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக்கொள்வது ...

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

தேவநதி என்று போற்றப்படும் கங்கை நதிக்கரையோரங்களிலுள்ள திருத்தலங்களில் எல்லா காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். அதுவும் விசேஷ நாட்களில் அத்திருத்தலங்கள் விழாக்கோலம் காணும். அந்த வகையில், வடஇந்திய பஞ்சாங்கத்தின்படி "ஜேஷ்ட மாத சுக்லபட்ச தசமி திதி' அன்று புனித கங்கை நதி பாயும் திருத்தலங்களில் எல்லாம் "கங்கா தசரா' என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இது பாபஹர தசமி விழா என்று போற்றப்படுகிறது.அப்பகுதிகளில் வசிப்பவர்கள் காலையில் புனித கங்கை நதியில் நீராடிவிட்டு, கங்கையை வணங்கி விரதம் மேற்கொள்வார்கள். மாலையில் மீண்டும் நீராடி, கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து பூஜைகள் செய்த பின், அன்றைய விரதத்தினை நிறைவுசெய்வார்கள். வெளியூர் பக்தர்களும் இதில் கலந்துகொண்டு புனிதம் பெறுகிறார்கள்.

ganga river

ஆனி மாத வளர்பிறை தசமி திதியன்று- அதாவது பாபஹர தசமியன்றுதான் தேவலோகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை, பூலோகத்திற்கு இறங்கி வந்து, பாதாள உலகில் சாம்பலாகிக் கிடந்த சகரபுத்திரர்களின் அஸ்தியில் கலந்து புனிதப்படுத்தி சொர்க்கலோகத்திற்கு அனுப்பினாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்கை நதியில் நீராடினால் மானிடர்களைப் பிடித்திருக்கும் பத்துவிதமான பாவங்கள் நீங்கும் என்று சாத்திரம் கூறுகிறது.தேவலோகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை பகீரதன் தவத்தால் பூலோகத்திற்கு வருவதற்குமுன், சிவபெருமான் அருளால் அவரது ஜடாமுடியில் தங்கி, பிறகு கங்கோத்ரியில் பூமியில் இறங்கி தேவப்பிரயாகை, லட்சுமணன் ஜூலா, ஹரித்வார் என பயணித்து வாரணாசி என்னும் காசிக்கு வருகிறாள். பிறகு கங்காசாகர் சென்று தன்னைக் கடலில் அர்ப்பணித்துக் கொள்கிறாள். அவள் கடலை நோக்கி ஓடிவரும் இடங்களெல்லாம் புனிதத்தலங்களாக மாறின.

குறிப்பாக, வாரணாசி என்னும் காசியில் கங்கை நதிக்கரையோரத்தில் 64 கட்டங்கள் உள்ளன. எனினும் தசாச்வமேத கட்டத்தில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. இது பிரம்மதேவன் அசுவமேத யாகம் செய்த இடம் என்கிறது புராணம்.காசியில் இந்த அசுவமேதக் கட்டம் மற்றும் சில கட்டங்களில் (படித்துறைகளில்) மாலையில் நடைபெறும் மங்கள ஆராத்தி பூஜை மிகவும் புகழ்பெற்றது. இந்தப் பூஜை வருடம் முழுவதும் தினமும் நடந்தாலும், கங்கை பூமிக்கு வந்த தசமியன்று மாலையில் கங்கை நதிக்குப் பூஜைசெய்து, அந்த மங்கள ஆரத்தியையும் கடைசியாக தரிசித்தால்தான் மானிடர்களின் அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்கின்றன வேதநூல்கள். அதுவும் பாபஹர தசமி அன்று விரதம் மேற்கொண்டு வழிபடுவது மிகவும் போற்றப்படுகிறது. பாபஹர தசமி என்றால் பத்துப் பாவங்களைப் போக்கும் தசமி என்று பொருள்.

ganga river

வாக்கில் செய்வது நான்கு; சரீரத்தால் செய்வது மூன்று; மனத்தால் இழைப்பது மூன்று. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் இந்த பத்துப் பாவங்களைப் போக்கிக் கொள்ள பாபஹர தசமி உதவுகிறது.வாக்கினால் செய்வது: கடுஞ்சொல், உண்மையில்லாத பேச்சு, அவதூறாகப் பேசுவது, அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.சரீரத்தால் செய்வது மூன்று: நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக்கொள்வது; அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது; பிறர்மனை நோக்குவது.மனத்தால் இழைக்கும் பாவங்கள் மூன்று: மற்றவர் பொருளை அடைய திட்டமிடுவது; கெட்ட எண்ணங்களை நினைத்தல்; பிறபொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.மேற்கண்ட பத்துப் பாவங்களும் குறிப்பிட்ட புண்ணிய காலமான பாபஹர தசமியன்று கங்கை நதியில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.


டி.ஆர். பரிமளரங்கன்