ஸ்ரீ ஞானரமணன்
பெரும்பாலான குடும்பங்களில் தாய்மார்களுடைய மனபாரம் தங்கள் பெண் பிள்ளைகளைப் பற்றியதாகும். சில குடும்பங்களிலோ ஆண் பிள்ளைகளைப் பற்றிய கவலைதான் பெரிதும் ஆக்கிரமித்துக்கொள்கிறது. கணவன்- மனைவி இருவருமே பணிபுரிதல், வீட்டு வேலைகள், கணவன் வேறெங்கோ பணிபுரிதல் என்று எத்தனையோ காரணங்களால், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்ப்பதை ஒரு பெரும் கடமையாகக் கொள்ள இயலாது போகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால், குழந்தை வளர்ப்பை ஆன்மப்பூர்வமாகக் கொள்வதே நன்று.
பிள்ளைகள் சரியாக, முறையாக வளராமைக்குக் காரணம், நம் பண்டைய மரபுகளைப் பெரிதும் மறந்ததும், பெற்றோர்களே தம் தாய்- தந்தையரை முறையாகப் பேணாததும், முறையான வழிபாடுகளை, ஆலய தரிசனங்களைப் பெறாததும் ஆகும். பெற்றோர்களுக்கான எளிமையான தினசரி வழிபாடுகள் ஞாயிறுமுதல் சனிக்கிழமைவரை ஒவ்வொரு நாளிலும், குறைந்தது ஒரு நாழிகையாவது (24 நிமிடங்கள்) கணவன்- மனைவி இருவரும் ஒருங்கிணைந்து ஆலயம் செல்லுதல், வீட்டில் சேர்ந்து பூஜித்தல், தெய்வீக விஷயங்களை மட்டும் அந்த நேரத்தில் பரிமாறிக்கொள்ளல், இருவரும் சேர்ந்து மறைத்துதிகளை ஓதுதல், ஸ்ரீராமஜெயம் எழுதுதல், பூக்களைத் தொடுத்தல், சந்தனம் அரைத்தல் போன்றவற்றைத் திருமணவாழ்வின் ஆரம்பம் முதலே ஆற்றி வந்தால், இல்லறத்தில் சாந்தம் தவழத் தொடங்கும்.
ஆனால், இந்த நிலையைப் பெறுவதற்கு பூர்வஜென்ம புண்ணிய சக்தி வேண்டும். இதற்காகவே, தம்பதிகள் ஞாயிறுதோறும் ஸ்ரீமன் சூரியநாராயண சுவாமியையும், சூரிய கிரணங்கள் மூலவரின்மேல் படியும் ஆலயங்களிலும், தேவி மூலமூர்த்தியாக அருளும் தலங்களிலும் (சாக்கோட்டை உய்யவந்தாம்பாள், நாட்டரசங்கோட்டை கண்ணாத்தாள், சமயபுரம் மாரியம்மன்) வழிபடவேண்டும். திங்களன்று சந்திரசேகரர், சோமநாதர், சந்திர மௌலீஸ்வரரையும், சந்திரமூர்த்தி தனித்த சந்நிதி கொண்டருளும் கோவில்களிலும், சிவபெருமான் சிலாவடிவத்தில் அருளும் தலங்களிலும் (நடராஜர், அர்த்தநாரீஸ்வரர்) வழிபடவேண்டும்.
செவ்வாயன்று துர்க்கை, காளிதேவி, முருகப் பெருமானையும், ஈஸ்வரனுக்கு வலப்புறம் அம்பிகை அருளும் திருமணக்கோலம் மற்றும் தவக்கோலத் தலங்களிலும்; புதனன்று மேதா தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், ஞானசரஸ்வதி, விநாயகப் பெருமான், சயனக்கோலத் திருமாலையும்; வியாழனன்று தட்சிணாமூர்த்தி, அமர்ந்தகோல அம்பிகையையும், மலைத்தல மாமுருகனையும்;வெள்ளியன்று சுக்ரவார அம்பிகையையும், ஈஸ்வரியாய் தேவி அருளும் தலங்களிலும்;சனிக்கிழமையன்று பெருமாளையும், நவகிரக மூர்த்திகளையும், குன்றேறி அருளும் திருமாலையும் தரிசித்து, குறித்த மந்திரங்களையும் ஓதிவருதல் வேண்டும். கலியுகத்தின் இயந்திரமயமான வாழ்க்கைமுறையில் ஒவ்வொரு நாளும் இவ்வகையில் வழிபடுவதென்பது இயலாததாயிற்றே எனப் பலரும் எண்ணக்கூடும். இதற்குக் காரணம், தெய்வீகத்திற்கு முன்னுரிமையளிக்கும் உத்தம மனோபாவத்தை மனிதகுலம் இழந்து வருவதாகும். கேளிக்கைகள், சினிமா, தொலைக்காட்சி, ஹோட்டல், ஆடம்பரமான உடைகள், அழகு சாதனங்கள் போன்றவற்றுக்கு நேரத்தையும் பணத்தையும் தண்ணீராய்ச் செலவழிக்கும் மனிதன், தெய்வ வழிபாட்டுக்கும், ஆலய தரிசனத்திற்கும் நேரமில்லை என கூறுவது வேதனைக்குரியதே!
அனைத்து மூர்த்தி வழிபாட்டுப் பலன்களையும் ஒருங்கே அளிக்கவல்ல அருந்தேவியே மனோன்மணி! வாலையோகச் சூத்திரங்களில், வாலை மனோன்மணியாகப் போற்றப்படும் தேவி கேதார்நாத் செல்லும் வழியில் அடிவாரத்தில் அருளும் தேவியாவாள்! அமாவாசையிலிருந்து பௌர்ணமிவரையிலும், பௌர்ணமியிலிருந்து அமாவாசைவரையிலும், ஒருவேளை மட்டும் உணவு, மஞ்சள் நிற ஆடை மட்டுமே தரித்தல், புலால் உண்ணாமை என்பதாக ஏதேனும் ஒருவகையிலேனும் விரதமிருந்து இருபட்சங்களிலும் தொடர்ந்து முறையாக வழிபட்டு வந்தால் திருமணவாழ்வில், தொழில்துறையில், பிள்ளைகளின் குணப்பாடுகளில் நல்ல முன்னேற்றம் கண்டிடலாம்.
மாதந்தோறும் ஒரு மலைத்தல வழிபாடு, கிரிவலமும் யோகப்பூர்வமான புண்ணிய சக்திகளைப் பெற்றுத்தரும். திருவண்ணாமலை போன்ற கிரிவல சக்தித் தலங்களில், விண்ணுலகங்களில் இருந்து நேரடியாகப் பெறவல்ல பல அபூர்வமான மூலிகா சக்திகள் தேவப் பிரகாசக் கதிர்களுடன் இணைந்து அருள்கின்றன. பலரும் அறியாத வகையில் மிகவும் அபூர்வமான பாறைசார் கிரிவலத் தலமாக திருப்பத்தூர்- சிங்கம்புணரி இடையே சதுர்வேதமங்கலம் அருகிலுள்ள அரளிப்பட்டி விளங்குகிறது. ஸ்ரீஆஞ்சனேய மூர்த்தி மானுட வடிவில் வலம்வந்த காந்தசக்தித் தலமாதலின், அரளிப்பட்டியில் பொலியும் காந்தசக்திகள் உள்ளம், மனம், உடலில் பொலிந்து தேவையற்ற பீதிகளை அகற்றி, வாழ்நாள் முழுதும் அருட்துணையாக அமையும். காந்த சக்திகளுடன் கூடியதாய், சிவகங்கை அருகிலும் திருமலை உள்ளது. திருமலையில் பெறவல்ல தெய்வத் திருமணக்காட்சி மிகவும் அபூர்வமானதாகும். இவை யாவும் குடும்ப வாழ்வில் யோகப்பூர்வமான சாந்தத்தைத் தருவிக்க வல்லவையாகும்.
திருமணத்திற்கான சுபமங்கள தேவதைகள் அடிக்கடி பிரசன்னமாகும் திருத்தலமே திருமலையாகும். வேங்கடாசலபதி தலமான திருப்பதிக்கும் திருமலை என்ற பெயர் உண்டெனினும், இங்கு நாம் குறிப்பிடும் திருமலை சிவகங்கை அருகே உள்ளதாகும். திருமண வரம் வேண்டுவோர் இங்கு வெள்ளி, சித்திரை உத்திர நாள் மற்றும் மாதாந்திர உத்திர நாட்களில் வழிபடுதல் மிகவும் சிறந்த பலனளிக்கும். வசிஷ்டரும், வாலை யோகச் சித்தர்களும் மிகுந்த உபாசனா சக்திகளுடன் போற்றி வணங்கும் மகத்தான பூர்வ அம்பிகையான ஸ்ரீமனோன்மணி தேவி, கலியில் ஒருசில ஆலயங்களில் மட்டுமே இப்பெயர் தாங்கி அருள்கிறாள். இத்தகைய தலங்களுக்கு தம்பதி சகிதமாகவும், குடும்பத்தோடும் அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள். தீராத உறவுப் பகையுடன், மனத்தாங்கல்களுடன் கடுகடுப்பான வாழ்க்கையை நடத்தி வருவோர், சுமுகமான நல்வாழ்க்கையைப் பெற்றிட, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதியிலான ஸ்ரீமனோன்மணி தேவி வழிபாடு நன்கு உதவும்.