Skip to main content

உங்கள் ஜாதகப்படி திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

 Do you know how marriage will work according to your horoscope?

 

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வு. ஒருவகையில் அது தவிர்க்கக்கூடாத ஒன்று என்றும் சொல்லலாம். இந்தத் திருமணம் சிலருக்கு வரமாகவும், சிலருக்கு "ஏன்தான் திருமணம் நடந்ததோ?' என்று நொந்துகொள்ளும் வகையில் சாபமாகவும் அமைகிறது. பத்து பொருத்தங்களும் இருப்பதாகக் கூறப்பட்டு கோலாகலமாக நடந்த திருமணங்கள் கூட தோல்வியில் முடியும் விசித்திரமும் நடக்கத்தான் செய்கிறது.

 

சிலருக்கு முதல் திருமணமே முப்பது வயதைக் கடந்த பின்னும் நடக்குமா என்ற ஊசலாட்டத்தில் இருப்பதையும், சிலருக்கு திருமணம் நடந்தும் ஏதோ காரணத்தால் ‘மண முறிவு' ஏற்படுவதையும், வெகு சிலருக்கு ‘விவாகரத்து’ கிடைப்பதில் கூட சிக்கல்கள் ஏற்பட்டு வழக்கு நீண்டு கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது. சிலருக்கு மனைவி அல்லது கணவன் இறந்துபோவது, விவாகரத்து பெறுவது ஆகிய காரணங்களால் முதல் திருமணம் முடிவுக்கு வந்து இரண்டாம் திருமணம் நிகழும். இந்த இரண்டாவது திருமணம் நடப்பதும் சிலருக்கு தாமதமாகும்.

 

இப்படி திருமணம் சார்ந்த அனைத்துமே அவரவர் ஜாதகப்படி வெவ்வேறு விதமாக அமைகிறது. ஒருவரது திருமணம் எப்படி அமையுமென்பதை அவர்களது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் ‘ஏழாம் பாவம்’ என்னும் களத்திர ஸ்தானத்தை வைத்து அறியலாம். இத்துடன் ஏழாம் பாவத்தின் அதிபதி, அதன் வலிமை, ஏழாம் பாவத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள், அவர்களின் நிலை, ஏழாம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள், அவற்றின் வலிமை இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஜாதகர் - ஜாதகிக்கு நடக்கும் தசை மற்றும் புக்தியின் அதிபதிகளாக வரும் கிரகங்கள் ஒருவருக்கொருவர் சமசப்தமமாக சஞ்சரித்தால்- அதாவது ஒருவர் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர் ஏழாவது வீட்டில் இருந்தால், ஜாதகர் - ஜாதகிக்கு திருமணம் விரைவில் நடக்குமென்று கூறலாம்.

 

இதேபோல நவாம்ச கட்டத்தில் லக்னத்துக்கு இரண்டாவது இடமெனப்படும் குடும்ப ஸ்தானத்தில் தசாநாதனும் புக்திநாதனும் இணைந்து காணப்பட்டாலும் திருமணம் சீக்கிரமாகவே நடக்குமென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் மேற்கூறிய இருவரும் சேர்ந்து நவாம்சத்தில் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும் ஜாதகருக்கு திருமணம் துரிதமாகவே நடைபெறும் எனலாம். சிலருக்கு, ‘கல்யாணமே செய்யாமல் இருந்திருக்கலாம். நிம்மதியாகவாவது இருந்திருக்கும். இப்படி தினமும் போராட்டமாக இருக்கிறதே' என்று சலித்துக்கொள்ளும் அளவுக்கு ஓயாத சண்டையும் சச்சரவுமாக இருக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கையே நரகமாவதும் உண்டு. அடிதடி, வம்பு வழக்கும் ஏற்படலாம். நவாம்ச லக்னம் ராசிக் கட்டத்தில் அமைந்துள்ள ஜனன லக்னத்துக்கு ஆறாவதாக அமைந்தால், மேற்கூறியபடி திருமணம் அமையும்.

 

இதேபோல சிலருக்கு திருமணமான ஒருசில நாட்களிலேயே பரஸ்பரம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவருக்கு பிடிப்பில்லாமல், ஏன் திருமணம் செய்துகொண்டோமோ என்று மனம் கசந்துபோகும் நிலை ஏற்படும். வெளியில் சொல்ல முடியாத வேதனைகளும், சம்பவங்களும் ஏற்படலாம். சுருக்கமாகக் கூறினால் இவர்கள் திருமணம் ஒரு தோல்வி என்றே சொல்லலாம். இதற்கு ஜாதகரின் ஜென்ம லக்னத்திலிருந்து எட்டாவதாக நவாம்ச கட்டத்தில் லக்னம் அமைந்திருப்பதைக் காரணமாகக் கூறலாம்.

 

சிலருக்கு ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி; கடன் வாங்கியும் பட்டினி' என்ற கதையாக, கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாக, திருமணமாகியும் கணவன்- மனைவி சேர்ந்து வாழ முடியாமல், தொழில் அல்லது வேலை காரணமாக தனித்தனியாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நிலையும் காணப்படும். இதற்கு ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் நவாம்ச லக்னம் அமைந்துள்ள வீட்டின் ‘விரயஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் வீடாக அமைந்திருப்பதே காரணம்.

 

விரைவாகத் திருமணம் நடக்க வேண்டுமென்பதே திருமணமாகும் வயதை எட்டியவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கனவாக இருக்கும். இதற்கும் அவரவர் ஜாதகப்படி அமைந்துள்ள கிரக அமைப்பே காரணம். திருமணம் பற்றிய கேள்விக்கு விடையறிய வேண்டுமானால் முதலில் ஆராய வேண்டியது ஏழாம் பாவமே. உரிய காலத்தில் திருமணம் நடைபெற பல கிரக அமைப்புகள் காரணமாக இருந்தாலும், இளம் வயதில் இனிமையான குணம், நல்ல அழகு, எதிர்பார்க்கும் தகுதிகளோடு வாழ்க்கைத் துணை சிலருக்கு அமைவதற்கு ஏழாமிடத்தின் அதிபதி என்னும் களத்திர ஸ்தானாதிபதி, ஜென்ம லக்னத்திலிருந்து ஒன்பதாமிடம் என்னும் ஒப்பரிய இடத்தில் அமர்ந்திருப்பதே காரணம்.

 

இந்த ஒன்பதாமிடம் என்பது பாக்கியஸ்தானம் மட்டுமல்ல; இதை பித்ரு ஸ்தானம் என்றும் கூறுவார்கள். பித்ருக்கள் - அதாவது நம் குல முன்னோர்களைப் பற்றியும் இந்த பாவத்தை வைத்தே அறியலாம். இங்கே தெளிவாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். பொதுவாக ஒரு குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் எந்தத் தடையுமில்லாமல் உரிய காலத்தில் நடக்க வேண்டுமானால் அதற்கு குலதெய்வத்தின் ஆசியும், குல முன்னோர்களின் அருளாசியும் மிகமிக அவசியம். குறிப்பாக குல முன்னோர்களான பித்ருக்களின் ஆசிக்கு மாறாக சாபம் இருந்தால், அந்தக் குடும்பங்களில் அகால மரணம், உரிய காலத்தில் திருமணம் நடைபெறாமல் போவது, குழந்தை பாக்கியம் கிட்டாமல் தாமதமேற்படுவது, அப்படியே பிறந்தாலும் ஏதாவது குறை இருப்பது, சண்டை சச்சரவுகள், கணவன் - மனைவி சேர முடியாமல் போவது, விவாகரத்து என்று பல சங்கடங்கள் ஏற்படும். குலதெய்வத்தைத் தெரிந்து கொள்ளாமலோ அல்லது வேறு தெய்வத்தை தங்கள் குலதெய்வமாக நினைத்தோ அல்லது இஷ்டமான தெய்வத்தை குலதெய்வமாக வழிபட்டோ வருவார்கள். இதுவும் தவறானதே. இதனாலும் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

 

பித்ரு சாபம், தேவதா சாபம் நீங்க உரிய பரிகாரங்களாக பித்ருசாப நிவர்த்தி, தேவதானுக்ரஹ விருத்தி ஹோமங்கள் மற்றும் உரிய எந்திரப் பிரதிஷ்டை செய்து வழிபடுவது, ரட்சாதாரணம் ஏற்று மந்திரோபதேசம் பெற்று உரிய மந்திரத்தை குருமுகமாக ஏற்று ஜெபித்து வருவது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

 

திருமணம் மூலம் அமையும் குடும்பம் பற்றிக் கூறும் இரண்டாம் பாவமான குடும்ப ஸ்தானத்தின் அதிபதிக்கும் விரைவாகத் திருமணம் நடப்பதில் பங்குண்டு. உதாரணமாக, ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தின் அதிபதியாக வரும் கிரகமும், இரண்டாமிடம் என்னும் குடும்பஸ்தானத்தின் அதிபதியாக அமைந்த கிரகமும் வலிமையாக சொந்த வீடுகளில் இருப்பது, ஆட்சி, உச்சம் பெறுவது அல்லது சுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை ஐந்தாமிடம் அல்லது ஒன்பதாமிடம் ஆகியவற்றில் இருப்பது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருக்கப் பிறந்த ஜாதகருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதுடன், இனிமையான குடும்ப வாழ்க்கையும் அமையுமென்று ஜோதிடம் கூறுகிறது.

 

இவ்வாறே திருமண பாக்கியத்தை ஒருவருக்கு அளிப்பதில் குரு பகவானின் அருளும் அவசியம். ‘குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தி' என்று சொல்வதிலிருந்தே வியாழன் என்னும் குரு பகவானின் சிறப்பை அறியலாம். இத்தகைய குரு பகவான் சேர்க்கை, பார்வை ஏழாமிடம் மற்றும் இரண்டாமிடத்தின் அதிபதிகளுக்கு இருக்குமானால் அவர்களுக்குத் திருமணம் அதிக சிரமமில்லாமலே நடைபெறும் என்று கூறலாம்.

 

சிலருக்கு ஏதோ காரணத்தினால் இரண்டாவது திருமணம் அமைவதும் உண்டு. பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமும், இரண்டாமிடமும் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது மேற்கூறிய இடங்களுக்குப் பாவிகளின் சேர்க்கை அல்லது பார்வை அல்லது மேற்கூறிய இடங்களின் அதிபதிகளுக்கு பாவ சேர்க்கை அல்லது சம்பந்தம் இருக்குமானால் இரண்டாம் திருமணம் ஏற்படும். மேற்கூறிய இரண்டாமிடம், ஏழாமிடம் ஒன்றில் பாதிப்பு காணப்பட்டாலும் இரண்டாம் திருமணம் உண்டு எனலாம்.

 

இக்காலத்தில் விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்வது ஆண் - பெண் இருவருக்குமே இயல்பான ஒன்றாகிவிட்டது. இது நியாயமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருந்தாலும் பொதுவாக திருமண முறிவு, மண வாழ்க்கையில் பிரச்சினை, தாம்பத்திய சுகம் பெறுவதில் குறைபாடு, அதிருப்தி, மறுமணம் செய்யும் நிலை உண்டாவது, அப்படியே மறுமணம் செய்தாலும் அதிலும் ஏதாவது ஒரு குறை, மறுமணம் அமைவதில் தடை, தாமதம் இதற்கெல்லாம் அவரவர் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக ஏற்பட்ட களத்திர சாபமோ, ஸ்திரீ சாபமோ பின்னணியில் இருப்பதை அறியலாம். மந்திர சாஸ்திர ரீதியான பரிகாரங்களை உரிய முறையில் செய்து நிவாரணம் பெறலாம்.

 

‘ஒரு வழியாகத் திருமணம் தான் நமக்கு முடிந்துவிட்டதே. இனி எல்லாம் சுபமே' என்று சிலருக்கு இருக்காது. கணவன் - மனைவிக்குள் எப்போதும் சண்டை, சச்சரவு, கோபதாபங்கள் - இதனால் நிம்மதியில்லாமல் போவது, பொருளாதாரச் சிக்கல்கள், நிச்சயமில்லாத, அமைதியில்லாத சூழ்நிலை இதன் காரணமாக குடும்பத்தில் பிரிவு போன்றவை காணப்படும். இதற்கு கரும்பாம்பு எனப்படும் ராகு, செம்பாம்பாம் கேது மற்றும் கர்மகாரகன் சனி ஆகிய மூவரும் ஏதோ ஒருவகையில் இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதே காரணம்.

 

சிலருக்கு அதிகாரம் செலுத்தும் மனைவி அமைந்து, ஜாதகர் அடங்கிப் போகும்படியாக இருக்கும். ஜாதகர் உள்ளுக்குள்ளேயே மனம் புழுங்கி, வெளியில் வேதனைகளை சந்திக்கும்படி இருக்கும். இவர் என்னதான் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும், வீட்டில் மனைவிக்கு முன் பெட்டிப் பாம்பாக அடங்க வேண்டியிருக்கும். இதற்கு லக்னாதிபதியை விட ஏழாமதிபதி வலிமை பெற்றவராக இருப்பதைக் காணலாம்.

 

வாழ்க்கை என்பது விசித்திரம் நிறைந்தது. கேட்பவர்க்குக் கிடைக்காது; கேட்காதவருக்கு கிடைக்கும். சிலருக்கு கேட்டதை விட அதிகமாகவும், சிலருக்கு கேட்டதற்கு எதிர்மாறாகவும், எங்கோ வெகு சிலருக்கே கேட்டபடியே கிடைத்ததாகவும் வாழ்க்கை அமைகிறது. இதற்கு அவரவர் வினைப்பயனே காரணமென்று கூறிய முன்னோர்கள், எதனால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய ஜோதிட சாஸ்திரத்தையும், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற உரிய பரிகாரங்களை அறிய மந்திர சாஸ்திரத்தையும் விட்டுச் சென்றுள்ளனர். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தினாலே திருமணம், குடும்பம், தொழில், கல்வி, உத்தியோகம், வெளியில் சொல்ல முடியாத அந்தரங்கப் பிரச்சினைகளுக்கும் விடைகண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ளலாம்.


- வி. விஜயராகவன்