Skip to main content

தீபாவளியில் ‘சியாமா பூஜை’ : காளி வழிபாடு!

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Diwali Shyama Puja 

 

தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் வங்காளத்தில் (கொல்கத்தா) காளி பூஜை மிகப் பிரபலம். நவராத்திரி காலங்களில் கொண்டாடப்படும் காளி பூஜையைப்போல, வங்கத்தில் தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டிலும் வண்ண வண்ணக் கோலங்களிட்டு, வரிசையாக விளக்குகளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.

 

இதுவொரு சமூக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திறந்த வெளியில் பெரிய மைதானத்தில் சுமார் இருபது அடி உயரத்தில் நீலநிறக் காளியை எழுந்தருளச் செய்து பூஜை செய்வர். தீபாவளிப் பண்டிகையையொட்டி ஐப்பசி அமாவாசையன்று நள்ளிரவில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி காளி பூஜையில் கலந்துகொள்வார்கள். அன்றிரவு முழுவதும் பட்டாசு வெடிகள் வெடிக்கும். வண்ண வண்ண வாண வேடிக்கைகளும் நடைபெறும். இந்த வாணவெடிகளின் ஒளியில் அமாவாசை இரவு பகல்போல் பிரகாசமாகத் திகழும். இதுகுறித்து அவர்கள் கூறும் காரணம் சற்று வித்தியாசமானது.

 

(தை- ஆனி மாதங்கள்) பகல் காலம்; தட்சிணாயனம் (ஆடி- மார்கழி மாதங்கள்) இரவுக் காலம் என்று இரு பிரிவுகளாகக் குறிப்பிடப்படுகிறதோ அதேபோல் மறைந்த முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) ஐப்பசி அமாவாசையன்று இரவு நேரம் துவங்குகிறதாம் அதாவது மறைந்த ஆத்மாக்களுக்கு அன்று முதல் (ஐப்பசி அமாவாசை) ஆறு மாதங்கள் தூக்கத்தைத் தரும் இரவுக் காலமாகக் கருதப்படுகிறது. இதனால் வீடுகளில் வரிசையாக அலங்கரிக்கப்படும் தீபங்களும், உயரமான இடத்தில் ஏற்றிவைக்கும் பெரிய அளவிலான தீபங்களும் இரவில் வழி தெரியாமல் தவிக்கும் பிதுர்களுக்கு வழிகாட்டுகிறதாம். அதனால்தான் உயரமான மூங்கில் கம்பங்களை ஊரின் பல இடங்களில் நட்டு, அவற்றின் உச்சியில் தீபமேற்றி ‘ஆகாச தீபம்' அமைக்கும் வழக்கம் உள்ளது. இன்றும் இந்த வழக்கம் வங்க கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

தீபாவளி அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் காளி பூஜையால், வரவிருக்கும் ஆபத்துகள் தவிர்க்கப்படுகிறதாம். அந்தநாளில் காளி தேவியை பயபக்தியுடன் பிரார்த்தனை செய்வதால் வருடம் முழுவதும் எந்தவித ஆபத்துகள், தடைகள் நேராவண்ணம் காளிதேவி காப்பாற்றுவதுடன், நல்லதே தருவாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். ஆரோக்கியமுடனும், வளமுடனும் வாழ காளிதேவி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

 

அனைவரும் ஒன்றுகூடி வழிபடும் காளிதேவியின் மூர்த்தங்கள் நீலநிறத்தில் அமைந்திருக்கும். இந்தக் காளி, சாந்தமான திருமுகத்துடன் காட்சியளிப்பாள். நவராத்திரிக் காலங்களில் வழிபடப்படும் காளி கறுப்பு நிறத்தில் காட்சி தருவாள். முகத்தில் சற்று உக்கிரம் தெரியும்.

 

இதனை ‘சியாமா பூஜை' என்று போற்றுவர். இந்த பூஜையே வங்காளத்தில் தீபாவளியாகும். அன்று விடியற்காலையில் நீராடி, புத்தாடை அணிந்து வீடுகளிலும் பூஜை செய்வர். ஐந்து நாட்கள் கழித்து மைதானத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் பெரிய காளியின் திருவுருவை அருகிலுள்ள நீர்நிலையில் விசர்ஜனம் செய்வர்.

 

- டி.ஆர். பரிமளரங்கன்