63 நாயன்மார்களில் ஒருவரான அதிபக்த நாயனார், சிவ பெருமானுக்கு தங்க மீன் படைக்கும் விழா நம்பியார் நகர் கடற்கரையில் எளிய முறையில் நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபக்த நாயனார், மீனவ குலத்தில் பிறந்தவர். சிவபெருமானின் மீது அளவற்ற பக்தி கொண்ட அவர், தான் பிடிக்கும் மீன்களில் முதல் மீனை தினமும் சிவபெருமானுக்கு அளிப்பதாக கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது பக்தியைச் சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒருநாள் இவரது வலையில் முதல் மீனாக தங்க மீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார். அந்த மீனைக் கண்ட சக மீனவர்கள், ‘உனக்கு பெரும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு, தங்க மீனே உனக்கு கிடைச்சிருக்கு, இதை நீ கடலில் விட வேண்டாம், இதைக் கொண்டு பெரும் செல்வந்தராகிவிடலாம்’ என ஆசை வார்த்தைகளைக் காட்டினர். ஆனால், அதிபக்த நாயனாரோ அவர்களின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் வழக்கம் போல் தனது வலையில் கிடைத்த முதல் மீனான அந்த தங்க மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.
அப்படி சிவபெருமானின் மீது அதீத பக்திகொண்ட அதிபக்த நாயனாரின் தெய்வ பக்தியைப் போற்றும் விழா, ஆண்டுதோறும் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக கடலில் தங்க மீன் விடும் நிகழ்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் மிக எளிய முறையில் நடைபெற்றது.
நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள், தங்கம் மற்றும் வெள்ளி மீன்களைக் கடலில் விட்டு விட்டுப் பிடித்தனர். பின்னர் மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள், கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபக்த நாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையில் இடும் நிகழ்வு நடைபெற்றது. குறைவான பக்தர்களோடு திருவிழா முடிந்துள்ளது.