அமெரிக்க செல்ல முயன்ற இளம் பெண்ணுக்கு கட்டாய கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிடோஷி என்ற 20 வயது இளம்பெண் சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவின் மரியானா தீவுகளுக்கு செல்வதற்காக ஹாங்காங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை அறைக்கு சென்ற அவரை, அங்கு இருந்த அதிகாரிகள் கர்ப்ப பரிசோதனை செய்ய சொல்லியுள்ளார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பரிசோதனைக்கு மறுத்துள்ளார். ஆனால், அதிகாரிகள் கர்ப்ப சோதனை செய்தால் மட்டுமே விமானம் ஏற அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த அவர், கர்ப்ப சோதனை செய்ய சம்மதம் தெரிவித்தார். உடனடியாக அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் அவர் கர்ப்பமாக இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்து, அவரை விமான பயணம் மேற்கொள்ள அனுமதித்தனர். அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் அங்கு குடியுரிமை பெற்று விடலாம் என்பதற்காக பிற நாடுகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் அங்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வதை தடுக்கவே இந்த சோதனை நடைபெற்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.