பிறந்த குழந்தை ஒன்று பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் அணிவது அத்தியாவசியமாகியுள்ளது. இந்நிலையில், துபாயில் பிறந்த குழந்தை ஒன்று பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாயை சேர்ந்த மகப்பேறு சிறப்பு மருத்துவர் சமீர் செயிப், தான் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையைத் தனது கைகளால் தூக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அக்குழந்தையின் கை மருத்துவரின் மாஸ்க்கில் மாட்டி, இழுத்தது. இந்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட மருத்துவர் அனைவரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சமிக்ஞை எனக் கூறியுள்ளார். மருத்துவரின் மாஸ்க்கை அகற்றும் இக்குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.