கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். இந்த நிலையில், கொரோனாவை விடப் பல மடங்கு உயிர்களைப் பலி வாங்கும் நோய் ஒன்று பரவக் கூடும் என இங்கிலாந்து சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு குழுவின் தலைவராகப் பணியாற்றிய தொற்றுநோயியல் நிபுணர் கேட்பிங்காம் நேற்று தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்தார். அவர் அந்த பேட்டியில், “கொரோனாவை விட அதிகமான பலியை ‘நோய் எக்ஸ்’ என்ற நோய் ஏற்படுத்தும். உலக சுகாதார நிறுவனத்தால் ‘நோய் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் நோய் அடுத்த சர்வதேச தொற்று நோயாக இருக்கலாம்.
கடந்த 1918 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரையில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் உலகம் முழுவதும் 5 கோடி உயிர்களைப் பலி வாங்கியது. இது முதலாம் போரில் இறந்தவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் 25 குடும்பங்கள் கொண்ட வைரஸ் குடும்பங்களை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால், 10 லட்சத்துக்கும் மேலான கண்டுபிடிக்கப்படாத வைரஸ், மாறுபாடுகள் கொண்டவையாக இருக்கிறது. அவர் ஒரு மாறுபாட்டிலிருந்து இன்னொரு மாறுபாட்டிற்குத் தாவக்கூடிய திறன் கொண்டவை.
கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் 2 கோடி பேரைப் பலி கொண்டவையாக இருந்தாலும், அதிலிருந்து பல பேரை நம்மால் காப்பாற்ற முடிந்தது. ஆனால், நோய் எக்ஸ் என்ற வைரஸ் நோய் எபோலாவின் இறப்பு விகிதத்திற்குச் சமமானவை. எபோலா நோய் 67 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்ட வைரஸ் நோயாகும். எனவே, உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒருவர் ‘நோய் எக்ஸ்’ வைரஸால் விரைவில் பாதிக்கப்படலாம். இதைச் சமாளிக்கப் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.