இந்தியாவை பொறுத்தவரை, 100 மில்லி மீட்டர் மழை என்பது சாதாரணமான ஒன்று. சில சமயங்களில் இரண்டுமணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே 100 மி.மீ மழை கொட்டித் தீர்த்துவிடும். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்யும் மழையின் அளவே 100 மி.மீதான்.
ஐக்கிய அரபு அமீரகம், செயற்கையாக மழையை வரவைக்க, உப்பைத் தூவி மழையை வரவைக்கும் ‘கிளவுட் சீடிங்’ என்ற முறையை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதால், மழையின் அளவை அதிகப்படுத்த புதிய முறை ஒன்றைப் பரிசோதிக்க உள்ளது.
இம்முறையில், மேகங்களுக்குள் ட்ரோன் அனுப்பப்பட்டு, ஷாக் கொடுக்கப்படும். அப்போது மேகத்தில் உள்ள நீர்த்திவளைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிய நீர்த்திவளைகளாக மாறும். இதனால் நீர்த்திவளைகளின் எடை கூடி, மழையாக பூமியில் விழும் என இந்தத் திட்டம் குறித்து, இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தத் திட்டம் கூடிய விரைவில் பரிசோதிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.