பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களை நடத்திவரும் இம்ரான்கான் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் நீதிபதியையும், போலீஸ் துறையையும் மிரட்டியதாக அவர் மீது இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு அலி ஜாவத் புகார் செய்தார். இதையடுத்து, அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நன்கொடை வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கட்சி போராட்டம், பேரணி ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. பேரணி வாயிலாக தங்கள் எதிர்ப்புகளை இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்தவர்கள் எழுப்பி வந்த நிலையில் பாகிஸ்தானின் வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கான் காயமடைந்துள்ளதாகவும், அதேபோல் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது இம்ரான்கான் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.