சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்று பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
அவரது முதலாவது அரசு முறை பயணமான இதில் பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தானில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கு 20 பில்லியன் டாலர்கள் அளவு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் 2 நாள்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறுகையில், 'இந்தியா எங்களது முக்கியமான நட்பு நாடு. இளவரசரின் இந்த வருகை வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். எப்போதும் இந்தியா எங்களுக்கு ஒரு மதிப்புமிக்க நண்பர்' என கூறினார். மேலும் இந்த சந்திப்பில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்தும் பேசப்படும் என கூறப்படுகிறது.