இந்தியா ரஷ்யாவுக்கு நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இரு நாட்டுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வந்த போதும், இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையை வகித்திருந்தது.
முன்னதாக, இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியாவை ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பாராட்டிப் பேசியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது தேசத்தின் நலனைப் பாதுகாக்க கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பாராட்டிப் பேசியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி ஒரு வலுவான தலைவர். நாட்டுக்கான நல்லதொரு காரியத்திற்கு தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் யாரும் இல்லை.
தேசத்தின் நலனுக்கு எதிரான முடிவை எடுக்குமாறு பிரதமர் மோடியை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முடியும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தேசநலனை காக்கும் விஷயத்திலும், இந்திய மக்களை காக்கும் விஷயத்திலும் சில நேரங்களில் மோடி எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டை கண்டு நான் வியந்து இருக்கிறேன். மோடியை போல், என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இவர் எடுக்கும் முடிவால், இந்திய ரஷ்ய நாட்டு உறவுகள் நிலைத்தன்மை வாய்ந்ததாக மாறாமல் பலமாக உள்ளது.