அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வெள்ளை மாளிகையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ட்ரம்ப்பிடம், தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வீர்களா எனக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதியாகக் கூறமுடியாது" எனத் தெரிவித்தார்.
அவரது இந்தப் பதிலுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி, "தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோற்றால் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவது குறித்து சிறிதும் அக்கறை காட்ட இயலாது. அவர் வெளியேற மறுத்தால் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார். உண்மை என்னவென்றால், அவர் இதுவரை அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் கண்டிப்பாக வெளியேறுவார்" எனத் தெரிவித்துள்ளார்.