அண்மையில் லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.
பிரதமர் மோடியின் பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற இந்திய பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், 'உயிர் காக்கும் உடை அணிந்த நரேந்திர மோடி இஸ்ரேலின் கைப்பாவை' என மாலத்தீவின் இளைஞர் நலன், தகவல், கலைத்துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா குறிப்பிட்டிருந்தார். மேலும், மாலத்தீவு இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் மால்ஷா ஷெரீப், மோடியை விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசு தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று (07-01-24) 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும், தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “மாலத்தீவு அரசாங்கம், அமைச்சர்களின் கருத்துகளில் இருந்து விலகி இருப்பது முற்றிலும் நெருக்கடியான சூழ்நிலையாகும். அரசாங்கம், அமைச்சர்களை இடைநீக்கம் செய்துள்ளது என்பது எனக்கு தெரியும். ஆனால், மாலத்தீவு அரசு, இந்திய மக்களிடம் முறையான மன்னிப்பு கேட்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அமைச்சர்களின் இனவெறி கருத்து வெட்கக்கேடானது மற்றும் சகித்து கொள்ள முடியாதது.
அமைச்சர்களின் வார்த்தைகள் மாலத்தீவு மக்களின் கருத்துகளோடு எந்த விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. நாம் இந்தியாவைச் சார்ந்து இருந்தோம் என்பதையும், நமக்கு தேவைப்படும் போதெல்லாம் இந்தியா தான் முதலில் நிற்கும் என்பதையும் நன்கு அறிவோம். அமைச்சர்களின் இந்த கருத்துகள் மூர்க்கத்தனமானது. இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதனால், விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு திரும்பி வாருங்கள் என இந்திய மக்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.