வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரி. வித்தியாசமான முறைகளில் தண்டனை கொடுப்பதில் பெயர் போனவர். அங்கு அவர் வைப்பதுதான் சட்டம், அவர் சொல்வதுதான் செய்தி. இப்படியான ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திவரும் அவரின் அண்மைக்கால செயல்பாடு மிகவும் சர்ச்சையாகியுள்ளது.
இராணுவப் புரட்சி நடக்கவிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், இராணுவ தளபதி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் தண்டனை விதித்துள்ளார். அந்த இராணுவ தளபதியின் பெயரையும் அவர்கள் வெளியிடவில்லை. அவர் அளித்த தண்டனை இதுதான், இராணுவ தளபதியின் கை, கால்கள் உள்ளிட்ட உடல்பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், அவரை தனது வீட்டிலுள்ள பிரானா மீன் தொட்டியில் போட்டுவிட்டார்.
பிரானா மீன்கள் அசைவ உண்ணி, அதற்கேற்றார்போலவே அவற்றின் பற்கள் மிகவும் கூர்மையானவை, வலிமையானவை, ஒரு இரும்பையே கிழிக்கும் அளவிற்கு அது வலிமையானவை. பண்டைய காலத்தில் மக்கள் அவற்றின் பற்களை ஈட்டியில் சொருகி மீன் பிடிக்கவும், விலங்குகளை வேட்டையாடவும் பயன்படுத்தினர். அந்தளவிற்கு வலிமையானவை. அவை குறைந்த நேரத்திலேயே மனித உடலை துண்டு, துண்டாக, குதறிவிடும். அப்படிப்பட்ட மீன்கள் நிறைந்த தொட்டியில்தான் அந்த இராணுவ தளபதியை வீசினார் கிம்.
இந்த நிகழ்வு குறித்த தகவலை தெரியப்படுத்தியுள்ள இங்கிலாந்து உளவுப்படையினர், ‘ஜேம்ஸ்பாண்டு’ படத்தின் பாணியில் கிம் ஜாங் உன் இந்த மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 1967ம் ஆண்டு வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன் அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அதை ஏற்பாடுசெய்த அமெரிக்க தூதர் உள்ளிட்டோரை விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றதாக தகவல்கள் பரவின. அதற்குமுன் வடகொரியா ராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜாங் உன், மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது உரையின்போது சத்தமாக கைதட்டவில்லையென்று தனது சொந்த மாமாவையே பீரங்கியை தகர்க்க பயன்படுத்தும் குண்டுகள் மூலம் சுட்டுக்கொன்றுள்ளார். இதுவரை அவர் 16 பேருக்கு மரணதண்டனை கொடுத்துள்ளார்.