ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.
அப்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான், "இந்த நடவடிக்கையின் மூலம் புல்வாமா தாக்குதல் போல மீண்டும் ஒரு தாக்குதல் இந்தியாவில் நடைபெறும். நான் இதுபோல தாக்குதல் நிகழப்போகிறது என்று இப்போதே தெரிவிக்கிறேன். ஆனால் இந்தியா இதற்கும் நம் மீதுதான் மீண்டும் பழியை சுமத்த முயற்சிப்பார்கள். அவர்கள் இதனை காரணமாக கொண்டு நம் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவார்கள், நாமும் திருப்பி தாக்குவோம். அதன்பின்னர் என்ன நடக்கும்? யார் இந்த போரில் வெற்றிபெறுவார்கள்? யாரும் வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் அந்த சண்டை ஒட்டுமொத்த உலகத்துக்கே மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
அவர்கள் இனவெறி கொள்கை உடையவர்கள். அவர்களது கொள்கை தான் மகாத்மா காந்தியை கொன்றது. இந்த பிரச்சினை தொடர்பாக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் தங்களது சொந்த சட்டங்களையே கடைப்பிடிக்கமாட்டார்கள். பின்னர் நாங்கள் அதற்கு பொறுப்பாக மாட்டோம். நாம் பேச்சுவார்த்தைக்கு அணுகுவதை நமது பலவீனமாக இந்தியா பார்த்ததால், நாம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை நிறுத்திக்கொண்டோம்" என கூறினார்.