வங்கதேசத்தில் ஏற்பட உள்நாட்டுக் கலவரத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா நேற்று (05.08.2024) ராஜினாமா செய்தார். மேலும் இந்த பரபரப்பான சூழலில் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தின் நிலைமை குறித்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசுகையில், “ஆகஸ்ட் 5 அன்று (நேற்று) ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
மிகக் குறுகிய அறிவிப்பில், இந்தியாவுக்கு வருவதற்கு ஒப்புதல் கோரினார். வங்க தேச அதிகாரிகளிடமிருந்து விமான அனுமதிக்கான கோரிக்கையையும் ஒரே நேரத்தில் பெற்றோம். அதன்படி அவர் நேற்று (05.08.2024) மாலை டெல்லி வந்தார். தூதரகம் மூலம் வங்காள தேசத்தில் உள்ள இந்தியச் சமூகத்துடன் மிகவும் நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறோம். அங்கு 19 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9 ஆயிரம் பேர் மாணவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் ஜூலை மாதம் இந்தியா திரும்பினர்.
சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் கண்காணித்து வருகிறோம். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகள் பற்றிய அறிக்கைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கு சீராகும் வரை அரசு ஆழ்ந்த கவலையுடன் இருக்கும். இந்த சிக்கலான சூழ்நிலையின் காரணமாக எச்சரிக்கையாக இருக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனப் பேசினார்.
தற்போது வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் முகமது ஷக்ஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். அதோடு, விட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவையும் விடுதலை செய்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகலுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என மாணவர்கள் அமைப்பு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.