இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாமல் நீடித்துவரும் நிலையில், அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன், சீன இராணுவம் மீதான ஆண்டு அறிக்கையை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் பென்டகன், எல்லை பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இந்தியா - சீனாவிடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறைந்தபட்ச முன்னேற்றத்தையே அளித்துள்ளது என கூறியுள்ளதோடு, எல்லையில் தொடர்ச்சியான மோதல்களுக்கு சீன இராணுவமே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது.
தொடர்ந்து, மே 2020லிருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சீன இராணுவம் ஊடுருவல்களை நிகழ்த்தியுள்ளதாகவும், இருநாட்டு வீரர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்ட பகுதிகளில் சீனா கூடுதல் இராணுவ வீரர்களைக் குவித்துள்ளதாகவும் கூறியுள்ள பென்டகன், விரைவான பதில் நடவடிக்கைகளுக்காக திபெத் மற்றும் சின்ஜியாங் இராணுவ மாவட்டங்களிலிருந்து கணிசமான ரிசர்வ் படைகள் மேற்கு சீனாவின் உள்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, மெய்யான எல்லை கட்டுப்பாட்டு கோடு தொடர்பான தனது கூற்றைத் திணிக்க சீனா அதிகமான மற்றும் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ள பென்டகன், இந்தியாவின் அருணாச்சல பிரேதசத்திற்கும், சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இடையேயான பிரச்சனைக்குரிய பகுதியில் 100 இல்லங்களைக் கொண்ட கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.