இங்கிலாந்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 எம்.பி.க்கள் ஒன்றிணைந்து, இந்திய விவசாயிகள் பிரச்சனையில் குரல் எழுப்ப வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், இங்கிலாந்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 எம்.பி.க்கள் ஒன்றிணைந்து, இந்திய விவசாயிகள் பிரச்சனையில் குரல் எழுப்ப வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து அரசு விவசாயிகளின் பிரச்சனை குறித்துப் பேசி, அதனைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் எனவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் தொழிலாளர் கட்சி மற்றுமின்றி கன்சர்வேடிவ் கட்சி மற்றும் ஸ்காட்டிஷ் தேசிய கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த எம்.பி க்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஏற்கனவே கனடா பிரதமர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவ தெரிவித்திருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து எம்.பி.க்களின் இந்தக் கடிதம் பாஜக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.