தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வேட்பாளரை கத்தியால் குத்திய சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்தமாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சரம் சூடுபிடித்துள்ளது. இந்த அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ அந்நாட்டு சோசியல் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக பிரச்சாரத்தில் இறங்கியுள்ள ஜெர் போல் சோனரோ மினாஸ் ஜெரேய்ஸ் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்திக்கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் மர்ம நபர் அவரை கத்தியால் குத்தி தாக்கப்படும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த கத்திகுத்தில் காயமடைந்த ஜெர் போல் சோனரோ சம்பவ இடத்திலேயே ரத்த காயத்துடன் மயங்கிவிழுந்து சரிந்தார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் 2 மணிநேரம் அறுவை சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.