ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர், சக பெண் எம்.பியிடம் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாதன் லேம்பர்ட். இவர் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தனது முதன் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சக பெண் நாடாளுமன்ற உறுப்பினரான நோவா ஏர்லிச்சைப் பார்த்து நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். ஆனால் தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், இரவில் அதனை தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து நோவா ஏர்லிச் திருமணத்திற்குச் சம்மதமும் தெரிவித்தார். ஏற்கனவே நாதன் லேம்பர்ட்-க்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் தனது காதலை வெளிப்படுத்திய எம்.பியின் செயலை பார்த்து ஆச்சரியமடைந்த சக உறுப்பினர்கள், எந்த வித கட்சி பேதமின்றி இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து பேசிய நாதன் லேம்பர்ட், நோவா ஏர்லிச் மீதான காதலை சிறந்த தருணத்தில் வெளிப்படுத்தக் காத்திருந்ததாகவும், இதைவிட சிறந்த தருணமும், இடமும் வேறு இல்லை என்று கருதி நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.