தஞ்சாவூர் பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறையும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, அதே பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பு பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும், மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறியதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முழுமையாக மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகம் விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும், மாணவி கூறும் மற்றொரு வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தனது மகளின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் ஜனவரி 31- ஆம் தேதி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி உத்தரவிட்டது.
மாணவியின் தந்தை முருகானந்தம், உச்சநீதிமன்றத்தில் இன்று (03/02/2022) கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது மகள் மரணம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தால், தனது தரப்பையும் கேட்ட பிறகே, எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்நிலையில், தமிழக டிஜிபி சார்பில் இந்த வழக்கில் தமிழக காவல்துறையும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.