Skip to main content

ட்ரம்ப்பின் கடைசி நேர அரசியல்... வலுக்கும் கண்டனங்கள்...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

america implement new sanctions on cuba

 

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கியூபா, தற்போது மீண்டும் அந்த பட்டியலில் நீட்டிக்கப்பட்டு, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

கடந்த 1959 ஆம் ஆண்டு கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவியேற்றது முதல் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே மோசமான உறவே நீடித்துவந்தது. இதனால் கியூபாவை பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடு என அறிவித்து, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. பல தசாப்தங்களாக இந்த உறவில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த சூழலில், ஒபாமாவின் ஆட்சியில், பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து கியூபா நீக்கப்பட்டது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகளும் குறைந்தன. 

 

இதனையடுத்து, அதிபராக ட்ரம்ப் வந்தபின் மீண்டும் கியூபாவுக்கு எதிராகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தார். கியூபாவை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். அதிபர் ட்ரம்ப்பின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கியூபா மீதான பயங்கரவாத நாடு எனும் அறிவிப்பு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒபாமா ஆட்சிக்காலத்தில், கியூபா உடனான அமெரிக்காவின் உறவு மேம்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பைடன் விரைவில் அதிபராகப் பதவியேற்க உள்ள சூழலில், ட்ரம்ப் அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் கார்லோஸ் பெர்னான்டஸ் டி காசோ, "கியூபா பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடு அல்ல என்பதை அமெரிக்க அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனும் அவரின் அரசாங்கமும் உறுதியாக நம்பும். இந்த நம்பிக்கையுடன், ஜனவரி 20-ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ட்ரம்ப் அரசு கடைசி நேரத்தில் கூட ஆதாயம் தேடும் நினைப்பில் கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்தது கண்டனத்துக்குரியது. இது முழுமையான சந்தர்ப்பவாதம். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளச் செய்யும் முயற்சி” எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்